இந்தியா
ஃபெஞ்சல் புயல்: திமுக கொண்டுவந்த ஒத்திவைப்பு நோட்டீஸ்.. முடங்கிய நாடாளுமன்றம்!

ஃபெஞ்சல் புயல்: திமுக கொண்டுவந்த ஒத்திவைப்பு நோட்டீஸ்.. முடங்கிய நாடாளுமன்றம்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளன.
இதனால், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்ததுடன், விவசாயிகளின் வேளாண் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதால் பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு வகையான பயிர்களும் கடும் சேதத்தை சந்தித்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் அதிகளவில் வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் தங்களின் உடைமைகளையும் இழந்துள்ளனர். மாநில அரசு ஒரு புறம் மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
முன்னதாக மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இதேசமயம், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 25-ம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது. இதில், அதானி மற்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டுவருவதால் அவை துவங்கி இன்று வரை ஒருநாளும் முழுமையாக நடைபெறாமல் தினமும் தள்ளிவைக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இன்று திமுக சார்பில் மக்களவையில் பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதன்படி, மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். அதில், புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும், புயல் பாதிப்புகளை குறித்து அவையில் விவாதிக்க அனுமதி வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். அதில், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.