இந்தியா
இந்தியாவுக்குள் வர முயன்ற இஸ்கான் அமைப்பினரை தடுத்து நிறுத்த வங்கதேசம்… எல்லையில் பரபரப்பு

இந்தியாவுக்குள் வர முயன்ற இஸ்கான் அமைப்பினரை தடுத்து நிறுத்த வங்கதேசம்… எல்லையில் பரபரப்பு
இஸ்கான் அமைப்பினர்
இஸ்கான் அமைப்பை சேர்ந்த 54 உறுப்பினர்களை உரிய ஆவணங்கள் இருந்தும் வங்கதேச அரசு தடுத்து நிறுத்தியிருப்பது எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அவர்கள் பயணம் செய்ததால் வங்கதேச அரசு அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இஸ்கான் அமைப்பை சேர்ந்த சுமார் 70 பேர் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வங்கதேசத்தின் பல்வேறு பகுதியில் வசிக்கும் இந்து மத பக்தர்கள், அங்கிருந்து வெளியேற முடிவு செய்து கடந்த சனிக்கிழமை அன்று சர்வதேச எல்லைப் பகுதியான பெனாபோல் – பெட்ராபோல் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு விசாரணை நடத்திய போலீசார் இஸ்கான் உறுப்பினர்களை எல்லையை தாண்டுவதற்கு அனுமதிக்கவில்லை.
விசாரணையின்போது உரிய விசா மற்றும் ஆவணங்களை இஸ்கான் உறுப்பினர்கள் போலீசாரிடம் எடுத்துக் காட்டியுள்ளனர். மேலும், மத சடங்குகளை நிறைவேற்றுவதற்காக தங்களை இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். சட்டப்படியாக அவர்கள் இந்தியாவுக்குள் செல்வதற்கு உரிமை இருந்தும், வங்கதேச அதிகாரிகள் அவர்களை கண்டித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் எல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சூழலில் அரசு தரப்பிலிருந்து இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் வகையில் அவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் வங்கதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், வங்கதேச சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அவர்கள் அமைதியான முறையில் தங்களது மத சடங்குகளை நிறைவேற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.