உலகம்
கிளர்ச்சியாளர் வசமானது சிரியாவின் அலெப்போ!

கிளர்ச்சியாளர் வசமானது சிரியாவின் அலெப்போ!
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 27, 28 தினங்களில் அரச படைகளுடன் சிரிய கிளர்ச்சி படையினர் திடீரென கடும் மோதலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்தே நேற்று முன்தினம் அலெப்போ நகரை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
இதன் போது சிரிய அரச படைகளுக்கும் எதிரணி படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அலெப்போவை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த எதிரணியினர், ’24 மணி நேர ஊரடங்கு உத்தரவை நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் அறிவித்தனர். “நகரத்தில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தனியார் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் அல்லது தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்கவுமே இந்த நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
2011 இல் வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது. இப்போரில் பலர் கொல்லப்பட்டனர். எனினும் 2012 முதல் கிழக்கு அலெப்போ போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. ஆன போதிலும் ரஷ்யா தனது விமானப்படை மூலம் அப்பகுதியை மீட்டு 2016 இல் ஜனாதிபதி அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பின்னர் சிறிய அளவிலான எதிர்ப்பு அங்கங்கே போராட்டங்கள் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.
இப்போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் சிரிய இராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.