இந்தியா
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட ‘பேய் கிராமம்’ ? – உண்மையான காரணம் இதுதானாம்!

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட ‘பேய் கிராமம்’ ? – உண்மையான காரணம் இதுதானாம்!
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது குல்தாரா கிராமம். 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜெய்சால்மர் அரசாங்கத்தின் கீழ் வளமான கிராமமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றோ யாரும் இல்லாத அனாதையாக கைவிடப்பட்டு கிடக்கிறது.
குல்தாரா கிராமத்தில் வசித்த மக்கள் அனைவருக்கும் மந்திரவாதி ஒருவர் சாபம் கொடுத்துவிட்டார் எனச் சிலரும், இல்லை, இல்லை, உள்ளூர் பண்ணையாரால் கிராம மக்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர் என்று சிலரும் கூறுகின்றனர். அன்றிலிருந்து பேய்களின் நகரமாக குல்தாரா மாறிவிட்டதாகவும், கிராமத்தில் உள்ள மக்களே இங்கு பேய்களாக உலாவுவதாகவும் பலர் கூறுகின்றனர்.
1291 ஆம் ஆண்டு பாலிவால் பிராமணர்களால் குல்தாரா கிராமம் உருவாக்கப்பட்டது. 1825 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு திடீரென்று கிராமத்தில் உள்ள அனைவருமே இருளில் மாயமாக மறைந்து போனார்கள் என்று ஒரு கதை கூறப்படுகிறது.
கொடுமைக்காரத் தலைவர் ஒருவர் குல்தாரா கிராமத்தின் தலைவர் மகளை விரும்பியதாகவும், அவளை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை ஒத்துக்கொள்ளாத கிராம மக்கள், தங்கள் கிராமத்தை கைவிட்டு இருளில் யாருக்கும் தெரியாமல் மறைந்து போனார்கள். அவர்கள் போவதற்கு முன்பு, இந்தக் கிராமத்தில் இனிமேல் யாரும் வசிக்க கூடாது என சாபமிட்டுச் சென்றுள்ளார்கள்.
நாளடைவில் குல்தாரா என்றாலே பேய் கிராமம் என்ற பெயர் நிலைப்பெற்றுவிட்டது. தற்போது, சமூக வலைதளங்கள் பெருகி விட்டதால், உலகம் முழுதும் குல்தாரா கிராமம் பிரபலம் அடைந்து வருகிறது. இதுதவிர பல யூடியூபர்களும் இங்கு வந்து பேய் இருப்பதாக கூறி வீடியோ எடுத்து இன்னும் அதிகமாக பிரபலபடுத்திவிட்டார்கள்.
இதனால் சுற்றுலாவாசிகளை ஈர்ப்பதற்காக 2015 ஆம் ஆண்டு இப்பகுதியை மேம்படுத்த முடிவு செய்தது ராஜஸ்தான் அரசு. ஆனால் இங்கு வருகை தரும் யாருக்குமே மாலை ஆறு மணிக்கு மேல் கிராமத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. ஏனென்றால், இந்தக் கிராமத்தில் இன்று இரவானால் பேய்கள் உலாவுவதாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.