இந்தியா
பாஜக அரசுக்கு மீண்டும் நெருக்கடி! டெல்லியை நோக்கி படை எடுக்கும் விவசாயிகள்

பாஜக அரசுக்கு மீண்டும் நெருக்கடி! டெல்லியை நோக்கி படை எடுக்கும் விவசாயிகள்
மத்தியில் கடந்த 2019ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததும், 2020ம் ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இதற்கு நாடு முழுவதில் இருந்தும் விவசாயிகள் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பஞ்சாப், ஹரியானா, உ.பி. மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநில விவசாயிகளும், மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள், ஒரு வருடமாய் தொடர்ந்து டெல்லியில் தங்களின் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் முகாமிட்டு அந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் எதிரொலியாக 2021ம் ஆண்டு மத்திய பாஜக அரசு புதிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. மேலும், அப்போது விவசாயிகள் தங்களின் விளை பொருட்களுக்கு முறையான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கவும் வலியுறுத்தினர். அதுவும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவே விவசாயிகள் போராட்டத்தைக் முடித்துக்கொண்டனர்.
இந்தப் போராட்டத்திற்காக பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் டெல்லிக்குள் வர முயன்றபோது அரசு சாலைகளில் தடுப்புகளை அமைத்ததும், இரும்பு முற்களை அமைத்ததும் பெரும் பேசுபொருளாக மாறியது. அதுமட்டுமின்றி, விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதும் பெரும் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்தது.
ஒருவருடம் நடந்த இந்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரிதாபமாகப் பலியானர். போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் மாவட்டத்தில் மத்திய அமைச்சரின் கார் மோதி, நான்கு விவசாயிகள் பரிதாபமாகப் பலியானர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
தற்போது மீண்டும் விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட முடிவு செய்து இன்று (டிசம்பர் 2ம் தேதி) டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர். பாரதிய கிஷான் பரிஷத் சங்கத்தைச் சேர்ந்த சுக்பீர் கலிஃபா தெரிவிக்கையில், “டிசம்பர் 2ம் தேதி பகல் 12 மணிக்கு எங்களின் போராட்டத்தைத் துவக்குகிறோம்” என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று டெல்லியில் போராட்டம் துவங்கியுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி – நொய்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதியில் இருந்து பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷம்பு மற்றும் கானௌரி பகுதியில் முகாமிட்டுள்ள விவசாயிகளும் டிசம்பர் 6ம் தேதி போராட்டத்தில் இணையவுள்ளனர். அவர்கள் தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை பேரணியாக டெல்லி நோக்கி சாலையில் பயணித்து சாலையிலேயே இரவை கழித்து டெல்லியை வந்து அடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 6ம் தேதி கிசான் மஸ்தூர் மோர்ச்சா, சம்யுக்த் கிசான் மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் தங்களின் பேரணியைத் துவக்குகின்றனர். அதே டிசம்பர் 6ம் தேதி கேரளா, உத்தரகண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் சட்டமன்றங்களை நோக்கி பேரணி செல்ல இருக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம், மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது, போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கேரி வன்முறையில் குற்றவாளிகளுக்கு தண்டனை, 2023 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மறுசீரமைப்பு, 2020 -2021 விவசாயிகள் போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு உள்ளிட்டவற்றை வலியுறுத்தியுள்ளனர்.
#WATCH | Uttar Pradesh | Farmers under different farmer organisations protest near Dalit Prerna Sthal in Noida as they are not allowed to enter Delhi pic.twitter.com/JMVaeYp872
முந்தைய நில கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடாக 10% மனைகள் ஒதுக்க வேண்டும். இழப்பீடு தொகையை 64.7% அதிகரிக்க வேண்டும். ஜனவரி 1, 2024க்குப் பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 20% மனைகள் வழங்க வேண்டும்.
நிலமற்ற விவசாயிகளின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.