Connect with us

இந்தியா

முன்னெச்சரிக்கை இல்லாமல் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதா?: துரைமுருகன் பதில்!

Published

on

Loading

முன்னெச்சரிக்கை இல்லாமல் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதா?: துரைமுருகன் பதில்!

5 கட்ட எச்சரிக்கை விடப்பட்டுதான் சாத்தனூர் அணை திறந்துவிடப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சாத்தனூர் அணை வேகமாக நிரம்பியது.

Advertisement

இதனால் சாத்தனூர் அணையில் இருந்து முன் அறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. தென் பெண்ணை ஆற்றில் இருந்து பாய்ந்தோடிய நீர் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

வீடுகளுக்கு புகுந்துள்ள நீர் இன்னும் வடியாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலையில், “திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்’ என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது” என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Advertisement

இன்று (டிசம்பர் 3) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஃபெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது.
தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி, சாத்தனூர் அணையின் வெள்ளப்பெருக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த விதிகளின் 2-வது பிரிவில் சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டங்களில் வெள்ளம் ஏற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான உத்தரவுகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

இதன்படிதான் தொடர்ந்து முன் கூட்டியே கணித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. நீர் வெளியேற்றப்படும் போது கரைகளில் உள்ள கொளமாஜனூர், திருவாதனூர், புதூர் செக்கடி, ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் உள்ளிட்ட பல கிராமங்களின் பெயர்களை சாத்தனூர் அணையின் உதவி செயற் பொறியாளர் குறிப்பிட்டு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தார்.

ஆற்றில் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

வெள்ளம் வெளியேறிய போது அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாதைகள் மீது வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாத்தனூர் அணையின் உதவி செயற் பொறியாளர் அணைக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது எச்சரிக்கைகளையும் செய்து வந்தார்.

Advertisement

அது அரசின் கவனத்திற்கு வந்து, உடனே முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் கரையை கடந்த போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அதீத கனமழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1-ம் தேதி அதிகபட்சமாக 23.10 செ.மீ மழையும், 2-ம் தேதி 18.50 செ.மீ மழையும் மொத்தம் இரண்டு நாட்களில் 41.60 செ.மீ மழை பெய்தது. அதே போல் தென்பெண்ணையாற்றின் மேற்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவிற்கு அதிகபட்ச மழை பெய்தது. கு
றிப்பாக ஊத்தங்கரையில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 50 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள முக்கிய நீர் தேக்கங்களான கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் அணைகள் ஏற்கனவே முழுக்கொள்ளளவை எட்டியிருந்தது.

ஃபெஞ்சல் புயலினால் பெய்த அதீத கனமழையினால் தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து தொடர்ந்து மிக விரைவாக அதிகரிக்க தொடங்கியது. சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவான 119.0 அடியில் 110 அடியை 25.10.2024 அன்று எட்டியதை தொடர்ந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளரால் நீர் வெளியேற்றும் விதிகளின்படி (Compendium Rules) அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தது. சாத்தனூர் அணை நீர்மட்ட அளவானது படிப்படியாக 110 அடியிலிருந்து உயர்ந்து 117.55 அடியாக 30.11.2024 வரை பராமரிக்கப்பட்டது.

இந்நிலையில் பி.ப.11.00 மணியளவில் 32000 கன அடி, 02.12.2024 அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் 63000 கன அடி, அதிகாலை 1.00 மணியளவில் 106000 கன அடி நீர்வரத்து வந்த வண்ணம் அதே அளவு வெளியேற்றப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து சாத்தனூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் அதிதீவிர கனமழை இடைவிடாமல் பெய்த வண்ணமே இருந்ததால் 02.12.2024 அன்று அதிகாலை 2.45 மணியளவில் ஐந்தாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
மேலும் 02.12.2024 அன்று அதிகாலை 2.00 மணியளவில் 130000 கன அடியாக நீர்வரத்திலிருந்து அதிகபட்சமாக அதிகாலை 3.00 மணியளவில் 168000 கன அடிக்கு உயர்ந்ததால், அணைக்கு வந்த வெள்ள நீர் அணையின் பாதுகாப்பினை கருதி படிப்படியாக உயர்த்தி அதிகாலை 3.00 மணியிலிருந்து 8.00 மணி வரை 168000 கன அடி/ வினாடிக்கு சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டது.

Advertisement

பெரு மழை தொடர்ந்து பெய்ததைத் தொடர்ந்து நீர் வரத்து அதிகமானதால் 5-வது வெள்ள அபாய எச்சரிக்கை டிசம்பர் 2-ம் தேதி முற்பகல் 2.45 மணிக்கு விடப்பட்டு வினாடிக்கு 1,80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

அதிகப்படியான மழையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள். பெரு மழையால் சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டது. ஆணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கும்?

பொருட்சேதங்களையும், உயிர்சேதங்களையும் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. அப்படியான ஆபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால் பெரிய அளவில் பாதிப்புகளோ உயிர் இழப்புகளோ ஏற்படாமல் அரசு மக்களைப் பாதுகாத்தது. சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தொடர்பாக அடுத்தடுத்து எச்சரிக்கைகளை அரசு சொல்லிக் கொண்டே இருந்தது. ஃபெஞ்சல் புயலின் போக்கைப் புரிந்து கொண்டால் ஏன் சாத்தனூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டது? என்பதற்கான காரணம் புரியும்.

Advertisement

சாத்தனூர் அணையில் மொத்தமாக 7 டி.எம்.சி அளவு நீர்தான் முழு கொள் அளவாக உள்ளது. ஐந்தாவது முன்னேச்சரிக்கை அளவாக வினாடிக்கு 1,80,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கான அபாயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 4-வது மற்றும் 5-வது முன்னெச்சரிக்கை விடப்பட்ட இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில் கணிக்க முடியாத அளவுக்கு அணையில் நீர் வந்து கொண்டிருந்தது.

5-வது முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கு பிறகும் நீர் வரத்து குறையாமல் மிக அதிக அளவில் இருந்தது. அந்த நேரத்தில் அணையில் இருந்து மிக அதிக அளவாக 1,80,000 கன அடி தண்ணீரை திறந்துவிடாமல் போயிருந்தால், ஆணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு 7 டி.எம்.சி தண்ணீரும் வெளியேறியிருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் அடங்காது. ஆறாத துயரமாக அது மாறியிருக்கும். பெருமளவில் ஏற்பட இருந்த உயிர் இழப்புகளை மிக சாதுரியமாக செயல்பட்டு, மக்களை அரசு பாதுகாத்திருக்கிறது என்பதை நீர் மேலாண்மை, அணை பாதுகாப்பியல் வல்லுநர்களுக்கு புரியும்.

நிலைமையை அரசு சரியாகக் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால்தான் பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. வீடுகள், விவசாய நிலங்கள்தான் மட்டுமே வெள்ள நீரில் மூழ்கியது. இதனையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உயிர்கள் விஷயத்திலும் எதிர்க் கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன. பொய்கள் என்றுமே விலை போகாது” என்று பதிலளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன