இந்தியா
மகாராஷ்டிரா: பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு!

மகாராஷ்டிரா: பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு!
மும்பை விதான் பவனில் இன்று (டிசம்பர் 4) நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்தில் பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக தேவேந்திர பட்நாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 132 இடங்களில் வெற்றிபெற்றது.
இந்தநிலையில், அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கேட்டு பாஜகவிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார்.
இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பட்னாவிஸ், ஷிண்டே ஆகிய இருவரிடமும் ஆலோசனை நடத்தினார். இந்தசூழலில், கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியிடாமலேயே, நாளை (டிசம்பர் 5) பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தசூழலில், மும்பை விதான் பவனில் பாஜக சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளர்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. நாளை (டிசம்பர் 5) நடைபெறும் பதவியேற்பு விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க உள்ளதாக என்டிடிவி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற முன்னணி ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Paralympics 2024: 29 பதக்கங்களுடன் இந்தியா வரலாற்று சாதனை – முழு பட்டியல்!
அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்பு: சிபிசிஐடி!