இந்தியா
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேர்வு: மேலிட பார்வையாளராக நிர்மலா சீதாராமன் நியமனம்!

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேர்வு: மேலிட பார்வையாளராக நிர்மலா சீதாராமன் நியமனம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132 தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய அதிகபட்ச தொகுதிகள். அதேபோல், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனா 57 தொகுதிகளையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
இவ்வளவு பெரிய வெற்றி பெற்று, தேர்தல் முடிவுகள் வந்து ஒரு வாரத்தை கடந்த நிலையிலும், அந்த மாநிலத்தில் இன்னும் புதிய அமைச்சரவையும் முதல்வரும் யார் என்பது முடிவு எடுக்கப்படாமல், பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
கடந்த வாரம், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய மூவருடனும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் வரும் 4-ம் தேதி முதல்வர் யார் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி 5-ம் தேதி மும்பையில் பதவி ஏற்பு விழா நடக்கும் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மும்பையில் கூட இருக்கிறது. மகாராஷ்டிரா பாஜக சட்டசபை உறுப்பினர்கள் குழு தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மேலிட பார்வையாளராக நியமித்து பாஜக ஆட்சிமன்றக்குழு உத்தரவிட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் உடன் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியை மேலிட பார்வையாளர்களாக நியமித்து பாஜக ஆட்சிமன்றக்குழு உத்தரவிட்டுள்ளது.