Connect with us

இந்தியா

“முத்துராமலிங்கத்தேவர் குறித்து அவதூறு பேச்சு; தமிழ்த்தலைவர்களை எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்க முடியாது” – சீமான் கண்டனம்

Published

on

“முத்துராமலிங்கத்தேவர் குறித்து அவதூறு பேச்சு; தமிழ்த்தலைவர்களை எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்க முடியாது” – சீமான் கண்டனம்

Loading

“முத்துராமலிங்கத்தேவர் குறித்து அவதூறு பேச்சு; தமிழ்த்தலைவர்களை எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்க முடியாது” – சீமான் கண்டனம்

“தமிழர் ஓர்மையைக் கருத்திற்கொண்டு, மள்ளர் மீட்பு களத்தின் நிறுவனத்தலைவர் செந்தில் மள்ளர், முத்துராமலிங்கத்தேவர் குறித்த அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “மள்ளர் மீட்புக் களத்தின் நிறுவனத்தலைவர் செந்தில் மள்ளர், திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரை இழிவுபடுத்தும் விதமாக அவதூறு கருத்துகளைப் பேசியிருப்பது அவசியமற்றது; வன்மையான கண்டனத்துக்குரியது.

தென் மாவட்டங்களில் தற்போது நடந்தேறும் படுகொலைகள் குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கொலைகளைத் தடுக்கத்தவறிய அரசை கண்டிப்பதைவிடுத்து முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி அவதூறு கருத்துகளைப் பதிவு செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

தமிழ் சமூக மக்கள் தெய்வமாகப் போற்றக்கூடிய முத்துராமலிங்கத் தேவரை இழிவுபடுத்துவதன் மூலம் பெருகி வரும் தமிழர் ஓர்மையைச் சீர்குலைக்கும் செயல் அன்றி வேறில்லை. இத்தகைய பேச்சுகள் பெரும்பான்மை தமிழ்ச்சமூக தேவர் சமூக மக்களின் மனங்களைக் காயப்படுத்தி,  தேவையற்ற மனக்கசப்பினை ஏற்படுத்தி, பெரும் மோதலையும், தீர்க்க முடியாத பகைமையும் உருவாக்க உதவுமே அன்றி, அதைத்தவிரத் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு ஏற்படப்போகும் நன்மை என்ன? இம்மானுவேல் சேகரனாரை எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து பேசலாம். அதற்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை இழிவுபடுத்திப் பேசுவது தவறானது. தமிழர்கள் தெய்வங்களாக வழிபடும் முன்னோர்களைத் தற்கால அரசியலுக்காக இழித்துரைப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது.

Advertisement

தமிழ்ச்சமூக மக்களாகிய தேவர், தேவேந்திரர் மக்கள் நீண்டகாலமாகப் பிரிந்து, பிளந்து கிடப்பதற்கு திராவிட, இந்தியக் கட்சிகள் செய்த சூழ்ச்சி அரசியலே காரணமாகும். இரு சமூக மக்களிடையே, பகைத்தீயை மூட்டி குளிர்காய்வதையும், அவர்களின் மோதலில் சிந்தும் இரத்தத்தைக் குடித்து ஆட்சி அதிகாரத்தை அடைவதையும் திராவிட – இந்திய அரசியல் ஓநாய்கள் காலங்காலமாகச் செய்து வருகின்றனர். ஐம்பது ஆண்டுகாலமாக அத்தகைய சூழ்ச்சி அரசியலுக்குப் பலியான கடந்தகாலத் தலைமுறையின் காயங்களிலிருந்தும், கண்ணீரிலிருந்தும் தற்போதைய தமிழிளந்தலைமுறையை மீட்டு ஒன்று சேர்த்து தமிழர்களுக்கென்று வலிமைமிக்க ஓர்மை அரசியலைக் கட்டி எழுப்புவதே தமிழ்த்தேசியமாகும். அதற்காக அரும்பாடு ஆற்றிக்கொண்டிருக்கும் வேளையில், அதனை வீழ்த்தும் வகையில் பொறுப்பற்று மீண்டும் மீண்டும் வெறுப்புப் பேச்சுகளை விதைப்பது தமிழினப்பிளவை ஏற்படுத்துமே தவிர ஒருபோதும் ஓர்மையை ஏற்படுத்தாது.

இந்த மண்ணில் நாம் தமிழர் கட்சி வந்த பிறகுதான் இம்மானுவேல் சேகரனார் சிலைக்கு தேவர் சமூகப் பிள்ளைகளும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தேவேந்திரர் சமூகப் பிள்ளைகளும் என்னுடன் வந்து மாலைபோட்டு மரியாதை செலுத்தும் வரலாற்றுப் பெருமாற்றத்தை இந்த மண்ணில் உருவாக்கியது. தமிழ்த்தேசிய ஒருமைப்பாடுதான் இன்றைக்கும், என்றைக்கும் தேவையான அரசியல் நிலைப்பாடு. அதனைத் தடுத்து, கெடுத்து தெற்கே தேவரும் – தேவேந்திரரும் ஒன்றாக நிற்கக் கூடாது, வடக்கே படையாச்சியும் – பறையரும் ஒன்றாகிவிடக்கூடாது என்று கருதுவது, அதற்காகச் சதிசெய்வது திராவிட – இந்திய அரசியல். அதற்குத் துணைபோவது தமிழ்த்தேசியம் ஆகாது. அதனை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது.

தமிழர்கள் பிரிந்து பிளந்து நின்றால்தான் தமிழர் அல்லாதவர்கள் இந்த நிலத்தை நிரந்தரமாக ஆள முடியும் என்பதுதான் திராவிட – இந்திய அரசியல் கோட்பாடு. அதனைத் தகர்ப்பதுதான் தமிழ்த்தேசிய அரசியல் கோட்பாடு. அதற்குத் தடைக்கல்லாக எவர் வந்தாலும் ஏற்கமாட்டோம். எதிர்ப்போம்!

Advertisement

ஆகவே, தமிழர் ஓர்மையைக் கருத்திற்கொண்டு, மள்ளர் மீட்பு களத்தின் நிறுவனத்தலைவர் செந்தில் மள்ளர், முத்துராமலிங்கத்தேவர் குறித்த அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன