இந்தியா
ஸ்கிரீன் உடைந்த போனில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி.. செங்கல்சூளையில் வேலை.. மாணவனின் நெகிழ்ச்சி கதை!

ஸ்கிரீன் உடைந்த போனில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி.. செங்கல்சூளையில் வேலை.. மாணவனின் நெகிழ்ச்சி கதை!
இவரது கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷேக் சர்ஃபராஸ் 400 செங்கற்களை தூக்கி ஒரு நாளைக்கு ரூ.300 சம்பாதித்து வந்தார். அவர் தனது குடும்பத்தை நடத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வேலையை செய்து வந்தார். கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தந்தையுடன் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இந்த வீடியோ இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் 100k க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. அந்த வீடியோவில், இவ்வளவு படித்தும் தான் இன்னும் வேலை செய்கிறேன் என்று என்னை சுற்றி இருப்பவர்கள் சொல்கிறார்கள் என்று அவர்கள் தன்னை கேலி செய்ததை கூறினார்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் சர்ஃபராஸ், அவரது தங்கை மற்றும் பெற்றோர்கள் உட்பட நான்கு பேர் வசித்து வருகின்றனர். மேலும் தனது குடும்ப வருமானத்திற்காக தனது தந்தையுடன் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். முன்னதாக, சர்ஃபராஸ் 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் சேர விரும்பிய அவர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு தகுதி பெற்றார். ஆனால் நேர்காணலுக்கு நடந்த விபத்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
கோவிட் -19 தொற்றுநோய்களின்போது, அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட நிதி உதவியுடன், ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி நீட் தேர்வுக்கு தயார் செய்ய முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார். அவர் யூடியூப்பில் பிசிக்ஸ் வாலா கோர்ஸ் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினார். பின்னர் தள்ளுபடி திட்டத்தின் கீழ் அதன் படிப்பில் சேர்ந்தார். 2023 இல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, சர்ஃபராஸ் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் ஹாஸ்டல் வசதி இல்லாததாலும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவரிடம் போதுமான பணம் இல்லாததாலும் படிப்பை விட்டுவிட்டார்.
மோசமான நிதி நிலை இருந்தபோதிலும், 2024 இல் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான சவாலை அவர் மீண்டும் ஏற்றுக்கொண்டார். அவரது உறுதியும், கடின உழைப்பும் அவருக்கு வெற்றியைத் தந்தது, இப்போது அவர் கொல்கத்தாவில் உள்ள நீல் ரத்தன் சர்க்கார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். சர்ஃபராஸுக்கு கல்லூரி செலவுக்கான பணமும், இத்துடன் கூடுதலாக ரூ.5 லட்சம் கடனுதவியும், புதிய மொபைல்லையும் வழங்க ஆன்லைன் பயிற்சி அமைப்பு முன்வந்துள்ளது. பிசிக்ஸ் வாலா தலைமை நிர்வாக அதிகாரி அலக் பாண்டே சர்ஃபராஸின் வீட்டிற்குச் சென்று அவருக்கு நிதியுதவி வழங்கினார்.