Connect with us

இந்தியா

6 மாதங்களில் ரூ.50,000 கோடி கடன்… எங்கே போகிறது தமிழகம்?- அன்புமணி

Published

on

Loading

6 மாதங்களில் ரூ.50,000 கோடி கடன்… எங்கே போகிறது தமிழகம்?- அன்புமணி

“ கடந்த 6 மாதங்களில் தமிழக அரசு ரூ.50,000 கோடி கடன் வாங்கியுள்ளது. எங்கே போகிறது தமிழகத்தின் பொருளாதாரம்?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024-25-ம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாடு அரசு ரூ.50,000 கோடியை கடனாக வாங்கியிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

Advertisement

இதில் ரூ.15,375 கோடி கடந்த ஆண்டுகளில் வாங்கிய கடன்களை அடைப்பதற்காக திருப்பி செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள தொகை வருவாய் செலவினங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நடப்பாண்டில் மேலும் ரூ.34,268 கோடி கடனை திரும்ப செலுத்த வேண்டியிருப்பதாலும், தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை கணிசமாக அதிகரித்துவிட்டதாலும் வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக மேலும் ரூ.1.05 லட்சம் கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.

2024-25-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,99,010 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் சராசரியாக ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்க வேண்டும்.

Advertisement

ஆனால், முதல் 6 மாதங்களில் வெறும் ரூ.1,23,970 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இது மொத்த இலக்கில் 41.46% மட்டும் தான். நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.28,717 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.18,588 கோடியாக குறைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், முதல் 6 மாதங்களிலேயே ரூ.28,717 கோடியைத் தாண்டிவிட்டது. இதேநிலை நீடித்தால் நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட புதிய இலக்கான ரூ.49,278 கோடியையும் தாண்டி விடும். நிதிப்பற்றாக்குறையின் நிலைமையும் மிக மோசமாகத் தான் இருக்கிறது. நடப்பாண்டின் நிதிப்பற்றாக்குறை ரூ.96,031 கோடியாக இருக்கும் என்று கடந்த ஆண்டில் கூறப்பட்டது.

Advertisement

நடப்பாண்டில் அது ரூ.1,08,689 கோடியாக உயர்த்தப்பட்டது. இதுவே மிகவும் அதிகம் எனும் நிலையில், அதையும் தாண்டும் வகையில் முதல் 6 மாதங்களிலேயே நிதிப்பற்றாக்குறை ரூ.53,934 கோடியாக அதிகரித்திருக்கிறது.

இதே நிலை நீடித்தால் நடப்பாண்டில் வாங்கப்பட வேண்டிய கடனின் அளவுக்கு ரூ.1.55 லட்சம் கோடி என்ற அளவையும் தாண்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. மக்கள் நலன் காக்கும் அரசின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது.

ஆனால், அதை சமாளிக்கும் அளவுக்கு மக்களை பாதிக்காத வகையில் அரசின் வருவாயும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், தொலைநோக்கு பார்வையில்லாத திமுக அரசுக்கு மதுவின் விலையை உயர்த்துவது, விற்பனையை அதிகரிப்பது ஆகிய இரண்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

Advertisement

கொள்ளையடிப்பதற்கு வசதியாக மின்சாரக் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில்வரி, வாகன வரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்திய திமுக அரசு, அரசின் வருவாயைப் பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2021-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை மொத்தம் ரூ.3,76,700.81 கோடி கடன் வாங்கியிருக்கிறது. இதுவரை வாங்கிக் குவித்துள்ள கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.63,722 கோடி வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் ரூ.175 கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. நிர்வாகத் திறனற்ற திமுக அரசு மீதமுள்ள காலத்தில் இன்னும் எத்தனை லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறதோ தெரியவில்லை?

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடனாக வாங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி முடிவதற்கு முன்பாக இது இன்னும் எவ்வளவு அதிகரிக்குமோ தெரியவில்லை. தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீட்க வேண்டும் என்றால் அதற்கான ஒரே வழி திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அதை செய்து முடிப்பார்கள்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன