இந்தியா
IIT Madras Placement: ரூ.4.3 கோடி ஊதியத்தில் வேலை.. சென்னை ஐஐடி மாணவருக்கு ஜாக்பாட்..!

IIT Madras Placement: ரூ.4.3 கோடி ஊதியத்தில் வேலை.. சென்னை ஐஐடி மாணவருக்கு ஜாக்பாட்..!
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவுகளின் படி, இந்தியாவிலேயே தலைசிறந்த கல்லூரியாக சென்னை ஐஐடி (IIT Madras) உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் பல்துறையில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில், பிளேஸ்மெண்ட் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு ஐஐடி கல்வி நிறுவனங்களில் பிளேஸ்மெண்ட் தொடங்கி உள்ளது. இதில் முதல் நாளே ஐஐடி வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை ஐஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.4.3 கோடி ஊதியத்திற்கு வேலை கிடைத்துள்ளது.
டெல்லி, பம்பாய், மெட்ராஸ், கான்பூர், ரூர்க்கி, காரக்பூர், கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு ஐஐடிகளில் இறுதி பிளேஸ்மெண்ட் தொடங்கியுள்ளன. இருப்பினும், ரூ.4.3 கோடிக்கான சிறந்த வேலை வாய்ப்பு குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய அளவில் உள்ள ஐஐடி கல்வி நிலையங்களில் இறுதி ஆண்டில் பிளேஸ்மெண்ட் நடத்தப்படும். இதில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்று வரும் பிளேஸ்மெண்ட்டில் ஐஐடி வரலாற்றில் முதல் முறையாக சென்னை ஐஐடி மாணவருக்கு வருடத்திற்கு ரூ.4.3 கோடி ஊதியத்தில் இந்த வேலை கிடைத்துள்ளது.
2024-25 வேலை வாய்ப்பு அமர்வின் முதல் நாளில், IIT காரக்பூர் மாணவர்கள் 750க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மென்பொருள், பகுப்பாய்வு, நிதி, வங்கி, ஆலோசனை மற்றும் முக்கிய பொறியியல் போன்ற துறைகள் அதிகபட்ச வேலைகளை வழங்கின. கூடுதலாக, ஒன்பது மாணவர்கள் சர்வதேச சலுகைகளை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக ரூ.2.14 கோடி வழங்கப்பட்டது. முதல் நாள் வேலைவாய்ப்பு அமர்வில் ஆப்பிள், கேபிடல் ஒன், டிஇ ஷா, க்ளீன், கூகுள், கிராவிடன், மைக்ரோசாப்ட், ஆப்டிவர், குவாண்ட்பாக்ஸ், டேட்டாபிரிக்ஸ், ஸ்கொயர்பாயிண்ட் கேபிடல், எபுலியண்ட் செக்யூரிட்டீஸ், சம்சாரா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.