இந்தியா
ஏக்நாத் ஷிண்டேவிற்கு என்ன பதவி? ஃபட்னாவிஸ் சொன்ன முக்கிய தகவல்

ஏக்நாத் ஷிண்டேவிற்கு என்ன பதவி? ஃபட்னாவிஸ் சொன்ன முக்கிய தகவல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே தனது பதவியை ராஜினாமா செய்து மாநில ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த அரசு பதவி ஏற்கும்வரை காபந்து முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்தார். அதேசமயம், முதலமைச்சர் குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் மகாராஷ்டிரா மகாயுதி கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
மகாராஷ்டிராவில் கடந்த ஆட்சியில் இருந்ததுபோலவே இந்த ஆட்சியிலும், இரு துணை முதல்வர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இரு துணை முதலமைச்சர்களாக அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என பேச்சுகளும் இருந்தன. இதில், ஏக்நாத் ஷிண்டே தனது மகனை துணை முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வைக்க காய் நகர்த்துவதாகவும் தகவல் வந்தது.
இந்தச் சூழலில் இன்று, மகாராஷ்டிராவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்தியப் பார்வையாளராக நிர்மலா சீதாராமன் இருந்தார். இந்தக் கூட்டத்தில், தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டமன்ற பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், அவர் மகாராஷ்டிராவின் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கூட்டம் முடிந்ததும், காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். அங்கு ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித்பவார் ஆகிய மூவரும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினர்.
ஏற்கனவே முடிவு செய்ததுபோல், இரு துணை முதல்வர்கள் இருப்பார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அதில் ஏக்நாத் ஷிண்டே ஒரு துணை முதல்வர் என்றும் சொல்லப்பட்டுவருகிறது.
இந்நிலையில், ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகிய மூவரும், கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், “நாங்கள் மூவரும் இணைந்து அரசை நடத்துவோம். நேற்று ஷிண்டேவைச் சந்தித்துப் பேசும்போது நீங்களும் கேபினேட்டில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அவர் கேபினேட்டில் பங்கேற்பார் என நம்புகிறேன்.
நான் மற்றும் இரு துணை முதல்வர்கள் நாளை பதவி ஏற்கின்றோம். எத்தனை அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், ஷிண்டேவிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ஏக்நாத் ஷிண்டே, “மாலை வரை காத்திருங்கள்” என்று பதில் கொடுத்தார்.
நாளை (டிச. 5ம் தேதி) மாலை மும்பையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அந்தப் பதவி ஏற்பில் இரு துணை முதல்வர்கள் யார், ஏக்நாத் ஷிண்டேவிற்கு என்ன பொறுப்பு உள்ளிட்டவை தெரியவரும்.
மாலை வரை காத்திருங்கள் என்று ஏக்நாத் ஷிண்டே சொன்னதும் இதனை மையப்படுத்தித் தான் எனவே நாளை மாலை மகாராஷ்டிராவில் யாருக்கு என்ன பொறுப்பு என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.