இந்தியா
கஞ்சா பயன்படுத்தினாரா மன்சூர் அலிகான் மகன்? மருத்துவ அறிக்கை வெளியானது

கஞ்சா பயன்படுத்தினாரா மன்சூர் அலிகான் மகன்? மருத்துவ அறிக்கை வெளியானது
போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீசார் அதிரடி காட்டி வருகின்றனர். சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கில், கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரகசிய இடத்தில் வைத்து விசாரித்ததில் அவர்கள் கொடுத்த தகவலின் படி, மண்ணடியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைதாகினர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது அம்பலமானது. இந்த வழக்கு தொடர்பாக காட்டாங்கொளத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரைக் கைது செய்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் காண்டெக்ட் நம்பர்களை சேகரித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து துப்பு துலக்கினர்.
அதில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கின் செல்போன் நம்பர் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்த அலிகான் துக்ளக்கை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
:
பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழப்பு… குடிநீரில் கலந்து இருந்தது என்ன தெரியுமா?
அவருடன் மேலும் 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த அலிகான் துக்ளக் தற்போது சினிமா உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தந்தை மன்சூர் அலிகானின் இயக்கத்தில் கடமான்பாறை எனும் படத்திலும் நடித்துள்ளார். பிரபல போதை வியாபாரிகளுடன் அலிகான் துக்ளக்கிற்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்திய காவலர்கள் அவர்களும் போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதிசெய்தனர்.இதையடுத்து துக்ளக், ரியாஸ், சந்தோஷ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையிலடைக்கப்பட்டனர். இதனிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ள சூழலில், துக்ளக் கஞ்சா பயன்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.