இந்தியா
காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து மோடிக்கு அழைப்பெடுத்த தமிழக முதலமைச்சர்!

காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து மோடிக்கு அழைப்பெடுத்த தமிழக முதலமைச்சர்!
தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார்.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, குடியிருப்புப்பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளமையால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் எனவும் பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 2ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமிழகத்தில் தற்போதைய சூழல் எப்படி உள்ளது? மழை, வெள்ளத்தால் எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? விவசாய நிலங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது? என்பனவற்றை முதலமைச்சரிடம் பிரதமர் கேட்டறிந்துகொண்டார் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதலமைச்சரிடம் பிரதமர் உறுதியளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)