
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 05/12/2024 | Edited on 05/12/2024

சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் கவுதம் மேனன், முதல் முறையாக மலையாளத்தில் இயக்கி வரும் திரைப்படம் ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ். இப்படத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக நடிக்க கோகுல் சுரேஷ் , சுஷ்மிதா பட் , விஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தர்புகா சிவா இசையமைக்க மம்மூட்டியே தயாரிக்கவும் செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலையில் பூஜையுடன் ஆரம்பித்து செப்டம்பரில் மம்மூட்டி சம்பந்தமான படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. மற்ற நடிகர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை நீரஜ் ராஜன் எழுதியிருக்க திரைக்கதை மற்றும் வசனங்களை நீரஜ் ராஜன், டி.ஆர். சூரஜ் ராஜன், கௌதம் மேனன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
முதல் முறையாக முன்னணி பிரபலங்களான மம்மூட்டி – கெளதம் மேனன் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில், மம்மூட்டி மற்றும் கோகுல் இருவரும் ஒருவரை பிடிக்க சென்றிருப்பது போல் தெரியும் சூழலில், கோகுல், ‘சார் அவர் கோபப்பட்டுவிட்டால்’ என்ன செய்வது என்று மம்மூட்டியிடம் கேட்க அதற்கு மம்மூட்டி, எப்படி திருப்பி அடிக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார். இருவருக்குமிடையே ஜாலியான உரையாடலாக இந்த டீசர் அமைந்துள்ளது. இதில் மம்மூட்டி துப்பறிவாளராக நடித்துள்ளார். மேலும் காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.