இந்தியா
ஜெயலலிதா என்கிற ஆளுமையின் அழியாத நினைவுகள்… நினைவு தின சிறப்பு பகிர்வு!

ஜெயலலிதா என்கிற ஆளுமையின் அழியாத நினைவுகள்… நினைவு தின சிறப்பு பகிர்வு!
ஜெயலலிதா
திரைத்துறையில் 1961இல் கன்னடத்தில் அறிமுகம் பெற்று பின்னர் 1965இல் ‘வெண்ணிறாடை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தவர் ஜெயலலிதா. ஒட்டுமொத்தமாக 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார். எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளராகவும் தீவிர பற்றாளராகவும் ஜெயலலிதா வலம் வந்தார்.
1980 இல் திரைத் துறையில் இருந்து விலகிய ஜெயலலிதா, பின்னர் 1982 ஆம் ஆண்டு, கடலூரில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். 1983 ஆம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
1987 இல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயலலிதா – அதிமுக ஜானகி அணி என்று இரு அணிகளாகப் பிரிந்தது. 1989 இல், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முதல் முறையாகச் சென்றார். அவரது இந்த வெற்றி அதிமுகவை ஒன்றாக இணைத்தது.
பின்னர் 1991 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். பின்னர் மீண்டும் 2001 இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் டான்சி வழக்கில் அவர் பதவி விலகினார்.
அப்போது முதலமைச்சராக முதல்முறையாக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர். 3 ஆவது முறையாக ஜெயலலிதா 2002 முதல் 2006 வரை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
மீண்டும் 2011 இல் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழக்க நேரிட்டது. இதனால், மீண்டும் முதலமைச்சராக ஓபிஎஸ் பதவி ஏற்றிக் கொண்டார். பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். 2016 இல் எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவைத் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டு வந்து 6 ஆவது முறையாக முதலமைச்சரானார் ஜெயலலிதா. அந்த ஆண்டு அவர் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.
அவரது ஆட்சிக் காலங்களில் தொட்டில் குழந்தை திட்டம், பெண்கள் காவல் நிலையங்கள், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், மகளிருக்கான இருசக்கர வாகன திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்த ஜெயலலிதா, 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினார். இதனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சியை இழந்தார்.
தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட பெரும் தலைவர்களில் ஒருவரான ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணம் குறித்த சந்தேகம்.. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்.. அதிமுகவில் பிளவு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது, தேர்தல் தோல்விகள் இவை எல்லாம் இன்று வரை நீண்டு கொண்டே இருக்கிறது.