இந்தியா
திடீரென ஒத்திவைக்கப்பட்ட PSLV சி-59 ராக்கெட் ஏவுதல்! என்ன காரணம்?

திடீரென ஒத்திவைக்கப்பட்ட PSLV சி-59 ராக்கெட் ஏவுதல்! என்ன காரணம்?
சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யவுள்ள ஐரோப்பிய விண்கலன்களை பி.எஸ்.எல்.வி. சி59 ராக்கெட் மூலம், இஸ்ரோ இன்று மாலை விண்ணில் செலுத்த உள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், புரோபா-3 என்ற திட்டத்தின் கீழ், சிஎஸ்சி மற்றும் ஓஎஸ்சி என்ற இரண்டு விண்கலன்களை உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு விண்கலன்களும் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்ய உள்ளன.
சுமார் 550 கிலோ எடை கொண்ட இந்த விண்கலன்கள், இஸ்ரோவின் ஏவுதளமான சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ளன. இதற்கான கவுன்ட்டவுன் ஏற்கெனவே தொடங்கிய நிலையில், இன்று மாலை 4.08 மணிக்கு PSLV சி-59 ராக்கெட் மூலம் இவை விண்ணில் ஏவப்படவுள்ளன.
இந்த விண்கலன்கள், அதிகபட்சம் 60,530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும். சூரிய வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு தகவல்களை இந்த ஆராய்ச்சியில் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
PSLV சி-59 விண்ணில் பாய்வதை காண்பதற்கு பெரியவர்கள், சிறியவர்கள் என ஆவலுடன் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதலத்தில் காத்திருந்தனர். இந்நிலையில், பிற்பகல் 3.30 மணி அளவில் PSLV சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் பெரும் கவலையடைந்தனர்.
வானிலை காரணமாகவும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நாளை ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.