இந்தியா
பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழப்பு… குடிநீரில் கலந்து இருந்தது என்ன தெரியுமா?

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழப்பு… குடிநீரில் கலந்து இருந்தது என்ன தெரியுமா?
தாம்பரம் அடுத்த பல்லாவரம் கன்டோன்மண்ட் பகுதியில், நேற்றிரவு மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீர் அருந்திய 37 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்லாவரம் மேட்டுத்தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குரோம்பேட்டை மருத்துவமனையில் 18 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருவேதி மற்றும் மோகனரங்கம் என்பவர்கள் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குன்றத்தூரை சேர்ந்த 54 வயதான திருவேதி என்பவர் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட 83 வயது முதியவரும் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் புறநோயாளிப்பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. கற்பகம் என்பவர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், 2 பேர் சொந்த விருப்பத்தின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு சென்றதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 பேரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததாக கூறினார். இவர்களின் உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 3 பேரின் உயிரிழப்பிற்கு குடிநீர் காரணமாக இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதன் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறினார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Also Read :
கங்கை நீரை எடுத்து ஆய்வு நடத்தியவர்க்கு காத்திருந்த ஆச்சரியம்… இப்படி ஒரு அதிசியமா!
பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்ததாக மோகனரங்கன், திருவேதி ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மருத்துவ முகாம் அமைத்து பொது மக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.