இந்தியா
பாஜகவில் இருந்து விலகல்.. கட்சி மாறிய ஆர்.கே.சுரேஷ்.. இணைந்த உடனே கிடைத்த பொறுப்பு!

பாஜகவில் இருந்து விலகல்.. கட்சி மாறிய ஆர்.கே.சுரேஷ்.. இணைந்த உடனே கிடைத்த பொறுப்பு!
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன்பின் நடிகர் ஆனவர் ஆர்.கே.சுரேஷ். “தர்மதுரை” போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்தவர், பாலா இயக்கிய “தாரை தப்பட்டை” படத்தில் நடிகராக அறிமுகமாகினார். இதன்பின் பல படங்களில் வில்லனாக நடித்தவர், ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதேபோல் அரசியலிலும் பயணித்து வருகிறார். அதன்படி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர், அதன்பின் பாஜக பக்கம் சென்றார்.
பாஜகவில் இணைந்த சில காலங்களிலேயே கட்சியில் முக்கிய பொறுப்பை வாங்கிய அவர், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிக நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில்தான் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இவரின் பெயரும் அடிபட்டது. பல ஆயிரம் கோடி மோசடி வழக்கான இதில் இவரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. இதையடுத்து சில நாட்கள் தலைமறைவாகவும் இருந்தார் அவர்.
பின்னர் துபாயில் இருந்து வந்தபின் வழக்கின் விசாரணைகளை எதிர்கொண்டு வந்தவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். பாஜகவில் இருந்து அவர் விலகலாம் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்துள்ளார். பிரபல கல்வி நிறுவன அதிபரும், முன்னாள் எம்பியுமான பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் (ஐஜேகே) தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து முன்னிலையில் ஆர்.கே.சுரேஷ் கட்சியில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த அன்றே ஆர்.கே.சுரேஷுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொறுப்பு தொடர்பாக ரவி பச்சமுத்து வெளியிட்ட அறிக்கையில், “பாரிவேந்தரின் ஆணைக்கிணங்கவும் பரிந்துரையின் பேரிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் (National Organizing Secretary) பொறுப்பில் ஆர்.கே.சுரேஷ் நியமிக்கப்படுகிறார்.
இப்பொறுப்பை ஏற்கும் நீங்கள், டாக்டர் பாரிவேந்தரின் வழிகாட்டுதலுக்கு இணங்க, கட்சியின் கொள்கைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டுமென தெரிவித்துக்கொண்டு தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.
மேலும், இப்பொறுப்பினை ஏற்கவுள்ள தாங்கள், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பொறுப்பாளர்களை நியமிப்பதோடு, அதிகளவில் உறுப்பினர்களையும் சேர்க்கவேண்டும்.
இச்செயல்பாட்டினை அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்குள் நீங்கள் நிறைவேற்றினால், உங்கள் பதவி நிரந்தரமாகும் என்பதோடு, மூன்று வருடங்களுக்கு உங்கள் பதவி நீட்டிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஆர்.கே.சுரேஷுக்கு கட்டுப்பாடும் விதித்துள்ளார்.