இந்தியா
பெற்றோர்கள் வைத்த குற்றச்சாட்டு.. பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்த மெட்ராஸ் ஐ.ஐ.டி.

பெற்றோர்கள் வைத்த குற்றச்சாட்டு.. பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்த மெட்ராஸ் ஐ.ஐ.டி.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் மாணவர்களுக்கு தாங்கும் திறன் சோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனை குறித்து, உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதாகவும், மாணவர்களுக்கு திட, திரவப் பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு எந்த மருந்தும் செலுத்தப்படவில்லை எனவும் எந்த மருத்துவ உபகரணங்களைக் கொண்டும் சோதனை செய்யப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
உடலுடன் தொடர்பில்லாத வகையில், ஷூவில் கருவியை வைத்தும், ஸ்மார்ட் வாட்ச்-ஐ பயன்படுத்தியும் தரவுகள் சேகரிக்கப்பட்டதாகவும், இது மருத்துவ சோதனை அல்ல என்பதால், பெற்றோர்களின் அனுமதியை பெற தேவையில்லை என ஆசிரியர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டதால், இனிமேல் பெற்றோரின் அனுமதியின்றி எந்த சோதனையும் நடத்தக் கூடாது என ஆசிரியர்களை எச்சரித்ததாகவும் ஐஐடி நிர்வாகம் கூறியுள்ளது.
இதனிடையே, வனவாணி பள்ளி முதல்வர் சதீஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் புதிய முதல்வராக பிரின்ஸி டாம் நியமிக்கப்பட்டுள்ளார்.