இந்தியா
மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் தேவேந்திர பட்நாவிஸ்… துணை முதல்வர் பதவி யாருக்கு?

மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் தேவேந்திர பட்நாவிஸ்… துணை முதல்வர் பதவி யாருக்கு?
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மகாயுதி கூட்டணியின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்காமல் இருந்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது.
இந்த கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவானதால், ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகத் தொடர்வாரா அல்லது தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகப் பதவியேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆனாலும் கூட, முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்த நிலையில், இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோரை மேற்பார்வையாளர்களாக பாஜக தலைமை நியமித்தது.
இந்த நிலையில் இக்கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை தேவேந்திர பட்னாவிஸ் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசியதற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் ஏக்நாத் ஷிண்டேவிற்கும், அஜித் பவாருக்கும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய இலாகாக்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில், தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும், அஃவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.