இந்தியா
“ராகுல் காந்தியை மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும்..” – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

“ராகுல் காந்தியை மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும்..” – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதியில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொள்ள கடந்த மாதம் 24-ஆம் தேதி, சென்றபோது வன்முறை வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், வரும் 10-ஆம் தேதி வரை வெளியாட்கள் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. இந்நிலையில், கலவரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்.பி. பிரியங்கா காந்தி இன்று சம்பல் பகுதிக்கு வருகை தரவிருப்பதாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சம்பல் மாவட்டத்துக்கு வருகை தர இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரை அண்டை மாவட்ட எல்லைகளிலேயே தடுத்து நிறுத்துமாறு, 4 மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக காவல் ஆணையர்கள் 2 பேர் மற்றும் 2 எஸ்.பி.க்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சம்பல் மாவட்டத்தில் நிலவும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, ராகுல் காந்தியின் நடவடிக்கையைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.