விளையாட்டு
ரூ. 70 ஆயிரம் கோடி சொத்து… சச்சின், கோலி, தோனியை விடவும் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர்… யார் தெரியுமா?

ரூ. 70 ஆயிரம் கோடி சொத்து… சச்சின், கோலி, தோனியை விடவும் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர்… யார் தெரியுமா?
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட வீரர்கள் கிரிக்கெட் உலகில், அதிகம் சம்பாதிக்கும் வீரர்களாக உள்ளனர். ஏராளமான விளம்பர படங்களில் இவர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி பிராண்டுகள் பெரும்பாலானவற்றில் இவர்கள் விளம்பர தூதர்களாக உள்ளனர்.
இந்தியாவில் சினிமாவைப் போன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். மற்ற எந்த விளையாட்டுக்கும் இல்லாத அளவுக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது. இதனால் ரசிகர்களின் மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர்களை தங்களது விளம்பர தூதர்களாக நியமிக்க முன்னணி பிராண்டுகள் ஆர்வம் காட்டுகின்றன.
இதன் மூலமாக கிரிக்கெட் வீரர்களுக்கு ஏராளமான வருமானம் கிடைக்கிறது. அந்த வகையில் சச்சின், தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களாக கருதப்படுகின்றனர். இருப்பினும் அவர்களை விடவும் அதிகமான சொத்துக்களை கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர் உள்ளார். அவர் இதுவரை எந்த ஐபிஎல் போட்டியிலும் விளையாடியது கிடையாது. பிசினஸ்மேனாக அவர் அறியப்பட்டதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த தகவல்கள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான அவரது பெயர் ஆரியமான் பிர்லா என்பதாகும். இவர் தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கிய நிர்வாகியாக தற்போது ஆரியமான் பிர்லா செயல்பட்டு வருகிறார். இவர் தனது கெரியராக கிரிக்கெட் விளையாட்டை தான் முதலில் தேர்வு செய்தார்.
முதல் தர போட்டிகளில் ஆரியமான் சதம் அடித்திருக்கிறார். மும்பையில் 1997 ஆம் ஆண்டு பிறந்த ஆரியமான் பிர்லா பின்னாளில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று அங்கேயே குடிபெயர்ந்தார். 2017 நவம்பர் மாதம் ஒடிசாவுக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் ஆரியமான் பிர்லா மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். பின்னர் வங்காள அணிக்கு எதிராக நடந்த ரஞ்சிக் கோப்பை தொடரில் 189 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார் ஆரியமான் பிர்லா.
மத்திய பிரதேச அணி தோற்றுப் போக வேண்டிய இந்த பரபரப்பான போட்டி ஆரியமான் பிர்லாவின் சதத்தால் நிறைவில் முடிவடைந்தது. 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை நேரடியாக எடுத்தது.
இருப்பினும் காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை. டிசம்பர் மாதத்தில் ஆரியமான் பிர்லா தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 22 மட்டுமே ஆனது. இவர்தான் இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பணக்காரர் என்பது கவனிக்கத்தக்கது.