இந்தியா
“விடியா அரசு என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் விடியா மூஞ்சிகள்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

“விடியா அரசு என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் விடியா மூஞ்சிகள்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை, வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், ரூ. 1,383 கோடி மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வெள்ளத்தில் இருந்து சென்னை ஒரே நாளில் மீண்டு வந்தது போல் புயல் பாதிப்பில் இருந்தும் நாம் மீண்டு வருவோம். கொளத்தூர் தொகுதியை நான் பார்வையிட்டபோது, அங்கே மழைநீர் தேங்கவில்லை” என ஒரு பெரியவர் சொன்னதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் (எதிர்க்கட்சி) வழங்கக்கூடிய நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கரை ஒட்டுவார்கள். அந்தக் காலமெல்லாம் தற்போது மலையேறிப்போச்சு” எனக் கூறினார். மேலும் தானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் அவதூறு பரப்பி ஆதாயம் தேட சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்றும் தென்சென்னைக்கு நிகராக வடசென்னையும் வளர்ச்சியடைய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.
“தொடங்கி வைத்த 8 மாதங்களில் 87 பணிகளில் 29 பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளோம். விடியலைத் தருவதுதான் உதயசூரியன். ஆனால் உதயசூரியனால் கண் கூசுகிற ஆட்களுக்கு விடியல் தெரியாது. விடியலை விடியா ஆட்சி என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டை அதளபாதாளத்திற்குத் தள்ளிய விடியா மூஞ்சுகளுக்கு விடியவே விடியாது” என விமர்சித்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.