Connect with us

சினிமா

விமர்சனம்: புஷ்பா 2 !

Published

on

Loading

விமர்சனம்: புஷ்பா 2 !

‘இது பான் இந்தியா படமல்ல, ஒரு தெலுங்கு படம்’ என்றே ‘புஷ்பா’ பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூறி வந்தார் இயக்குனர் சுகுமார். ஆனால், அதன் தெலுங்கு, மலையாள ‘டப்’ பதிப்புகளை விட இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றியை ஈட்டியது.

பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் நாயகன் அல்லு அர்ஜுனுக்குத் தனி ரசிகர் கூட்டம் உருவாகக் காரணமானது. இதன்பிறகு பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்தார் நாயகி ராஷ்மிகா மந்தனா. மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு அது.

Advertisement

அதன் தாக்கத்தின் காரணமாக ‘புஷ்பா 2’ திரைப்படம் தெலுங்கில் தயாராகி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மட்டுமல்லாமல் பெங்காலி மொழியிலும் ‘டப்’ செய்யப்பட்டிருக்கிறது.

சட்டவிரோதமாகச் செம்மரம் வெட்டுகிற கூலியாளாக இருந்த புஷ்பா எப்படி மிகப்பெரிய கடத்தல்காரர்களில் ஒருவராகி, அதன் சிண்டிகேட்டின் தலைவர் ஆக ஆனார் என்பதைச் சொன்னது ‘புஷ்பா’.

இரண்டாம் பாகமோ, கோடிகளில் புரளும் அவர் எவ்வாறு ஒரு மாநிலத்தின் அரசியலைத் தீர்மானிப்பவராக மாறினார் என்பதைச் சொல்கிறது.

Advertisement

இதுதான் கதை என்று தெரிந்தபிறகும், ‘புஷ்பா 2’ பார்ப்பதில் ஆர்வம் காட்ட முடியுமா? ‘முடியும்’ என்கிறது இயக்குனர் சுகுமார் & டீம் காட்சியாக்கத்தில் காட்டியிருக்கும் சிரத்தை.

சரி, ஒரு தெலுங்கு படமான ‘புஷ்பா 2’ எந்தளவுக்குத் தமிழ் ரசிகர்களை ஈர்க்கிறது அல்லது அயர்வுற வைக்கிறது?

சட்டவிரோதமாகச் செம்மரக்கட்டைகளைக் கடத்துவதில் தனி ‘ராஜ்யம்’ நடத்திவரும் புஷ்பாவின் (அல்லு அர்ஜுன்) ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் துடிக்கிறார் காவல் கண்காணிப்பாளர் பன்வர் சிங் ஷெகாவத் (பகத் பாசில்).

Advertisement

அதற்கேற்ப, அவரது ஆட்களைக் கூண்டோடு பிடிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. ஷெகாவத் கைது செய்த ஆட்களில் சீனிவாசனும் ஒருவர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் அவர் லாக்கப்பில் இருக்கிறார். அவரை விடுவிப்பதற்காக அங்கு செல்கிறார் புஷ்பா. அப்போது ஷெகாவத்தின் கெடுபிடியால் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியிருப்பதாகச் சொல்கின்றனர் போலீசார். உடனே, வாழ்நாள் முழுக்கப் பணி செய்தால் அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தை ஒட்டுமொத்தமாக அன்றிரவே தந்து, அவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைக்கிறார். தனது ஆட்களையும் விடுவித்து அழைத்துச் செல்கிறார். அந்த சம்பவம் ஷெகாவத்தை இன்னும் எரிச்சலடைய வைக்கிறது.

சித்தூர் பகுதியில் எம்.பி. ஆக இருக்கும் சித்தப்பா (ராவ் ரமேஷ்) மாநில அமைச்சர் ஆக ஆசைப்படுகிறார். அதனால், அவரை அழைத்துக்கொண்டு முதலமைச்சரைச் சந்திக்கச் செல்கிறார் புஷ்பா. அப்போது, தனது மனைவி ஸ்ரீவள்ளியின் (ராஷ்மிகா மந்தனா) விருப்பத்திற்காக முதலமைச்சர் (ஆடுகளம் நரேன்) உடன் புகைப்படம் எடுக்க முயல்கிறார். ஆனால், அவரோ ‘ஒரு கடத்தல்காரனோடு போட்டோ எடுத்தால் இமேஜ் என்னாவது’ என்கிறார். அது மட்டுமல்லாமல், ‘பொண்டாட்டி பேச்சை கேட்டு எவன்யா உருப்பட்டிருக்கான்’ என்று நக்கலடிக்கிறார். அவ்வளவுதான்.

அந்த நொடி முதல் சித்தப்பாவை முதலமைச்சர் ஆக்குவதென்று முடிவெடுக்கிறார் புஷ்பா. அதனைச் சொன்னதும், சித்தப்பாவே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார். ‘நடக்கிற காரியமா இது, போட்டோ எடுக்கலைன்னு முதலமைச்சரை மாத்தப்போறேன்னு சொல்றது நல்லாவா இருக்கு’ என்கிறார். ஆனால், புஷ்பா அந்த முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை.

Advertisement

டெல்லியில் இருக்கும் மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டி (ஜகபதி பாபு) மூலமாக காய் நகர்த்த ஆரம்பிக்கிறார். கூடவே, கட்சியிலுள்ள எம்.எல்.ஏக்களை சித்தப்பா பக்கம் சாய்ப்பதற்காக பெரும்பணம் திரட்டும் ஒரு ‘டீலில்’ இறங்குகிறார்.

இந்த விஷயம் அரசல்புரசலாகப் புஷ்பாவின் தொழில்முறை எதிரியான மங்கலம் சீனு – தாட்சாயணி (சுனில், அனுசுயா) தம்பதிக்கும், அவர்கள் மூலமாக ஷெகாவத்துக்கும் தெரிய வருகிறது. அடுத்த நொடியே, அதனைத் தடுக்கும்விதமாக அனைத்துச் செயல்களிலும் அவர்கள் இறங்குகின்றனர்.

இறுதியில், புஷ்பா தான் நினைத்ததைச் சாதித்தாரா என்பதோடு மேலும் சில கிளைக்கதைகளையும் நமக்குக் காட்டுகிறது ‘புஷ்பா 2’.

Advertisement

’சிஎம்மோட நீ எடுத்த போட்டோவை வீட்டு ஹால்ல மாட்டணும்’ என்று ஸ்ரீவள்ளி புஷ்பாவிடம் சொல்வதும், அதனை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சரோடு புஷ்பா புகைப்படம் எடுக்க முயல்வதும் சிறிய விஷயங்கள் தான். அதன் காரணமாக ஒரு பிரளயமே ஏற்படுவதை ஒரு கமர்ஷியல் படத்திற்கே உரிய சுவாரஸ்யங்களுடன் திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுகுமார். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடி உடன் பகத் பாசில், சுனில், அனுசுயா, ஜகபதி பாபு, ராவ் ரமேஷ், ஜகதீஷ் பிரதீப் பண்டாரி, சண்முக், அஜய், ஆதித்ய மேனன், பிரம்மாஜி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

ஒவ்வொருவரையும் நாம் நினைவில் இருத்தும்விதமாகச் சில காட்சிகளைத் தந்திருக்கிறது சுகுமாரின் திரைக்கதை. ஆனாலும், முதல் பாகம் போன்று ’செறிவான உள்ளடக்கம்’ என்று சொல்லும்படியாக இப்படம் இல்லை.

Advertisement

பின்னந்தலையில் மயிர்க்கற்றை புரள, அடர்த்தியான தாடியைப் புறங்கையால் வருடும் ஸ்டைல் உடன் இடது தோளைக் கொஞ்சம் உயர்த்தியவாறு படம் முழுக்க ‘புஷ்பா’ எனும் பாத்திரமாகவே வருகிறார் அல்லு அர்ஜுன். கனவுப்பாடலான ‘பீலிங்ஸ்’ பாடலில் மட்டுமே அது ‘மிஸ்ஸிங்’. அந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் அரிதாகக் காண்கிற ஒன்று.

பொதுவாகத் தெலுங்கு படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமிருக்காது. இதில் ராஷ்மிகா வரும் காட்சிகள் இரட்டை இலக்கத்தைத் தொடாது என்றபோதும், பெரும்பாலான காட்சிகள் அவர் ‘ஸ்கோர்’ செய்யும் வகையிலேயே உள்ளது. என்ன, நாயகன் நாயகி இடையிலான ‘நெருக்கமான’ காட்சிகளைக் குடும்பத்தோடு காணும்போது மட்டும் ‘சங்கடப்பட’ வேண்டியிருக்கும்.

‘புஷ்பா’ போல அதகளம் செய்யாதபோதும், இதில் பகத் பாசிலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சில காட்சிகள் தரப்பட்டுள்ளன. ராவ் ரமேஷ் உடன் அவர் பேசுகிற காட்சி மட்டுமல்லாமல் பிரம்மாஜி உடனான சில வசனங்களும் தியேட்டரில் சிரிப்பையும் கைத்தட்டல்களையும் வரவழைக்கின்றன.

Advertisement

மாற்றந்தாய் வயிற்றில் பிறந்த சகோதரனாக வரும் அஜய் பாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகள், ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜுன் இடையிலான உரையாடல்கள் ரசிகர்களைக் கண்ணீர் வடிக்க வைக்கும் வகையிலான ‘சென்டிமெண்ட்’ டை கொண்டிருக்கின்றன. ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை விட அவையே இப்படத்தின் பலம் ஆக விளங்குகின்றன.

’கிஸ்ஸிக்’ பாடலுக்கு அல்லு அர்ஜுன் உடன் ஸ்ரீலீலா நடனமாடியிருக்கிறார். அசைவுகளில் ஆபாச நெடி அதிகம் என்றபோதும், அப்பாடல் அருவெருப்பூட்டும் விதமாக அமையவில்லை.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ‘புஷ்பா புஷ்பா’, ‘சூடான’ உள்ளிட்ட நான்கு பாடல்களும் கேட்கும் ரகம் என்றாலும், அவற்றின் வரிகளைத் தெளிவாகக் கேட்க முனையும்போது முகம் சுளிப்பது உறுதி. ‘யாரெல்லாம் இதற்கு ஒப்புதல் தெரிவித்தது’ என்று தெரியவில்லை.

Advertisement

இப்படத்தில் கூடுதல் பின்னணி இசை என்று சாம் சி.எஸ். பெயர் குறிப்பிடப்படுகிறது. அது வெறும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டும்தான் அவர் பின்னணி இசையமைத்தாரா அல்லது மொத்தப்படமும் அவர் கைவண்ணம்தானா என்பது தெரியவில்லை. ஆனால், டைட்டிலில் பின்னணி இசை என்று தேவிஸ்ரீ பிரசாத் பெயரே குறிப்பிடப்படுகிறது.

ஒளிப்பதிவாளர் மிரோஸ்லா குபா ப்ரோஸக், படத்தொகுப்பாளர் நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ராமகிருஷ்ணா – மோனிகா இணை, விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் கமல் கண்ணன் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் அபாரமான உழைப்பின் காரணமாகத் திரையில் ஒளிர்கிறது ‘புஷ்பா 2’வின் காட்சியாக்கம்.

கடந்த நாற்பதாண்டு காலமாகத் தெலுங்கு படங்களைப் பார்த்து ரசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு, அப்படங்களில் இருக்கும் யதார்த்தத்தை மீறிய காட்சி சித்தரிப்புகள் ரொம்பவே பரிச்சயம். நாயகனுக்கான பில்டப், இதர பாத்திரங்களின் அட்ராசிட்டி, பெண் பாத்திரங்கள் மீதான அத்துமீறல்கள், நாயகியின் அதீத கவர்ச்சி, சண்டைக்காட்சிகளில் தெறிக்கும் வன்முறை என்று பல விஷயங்கள் திரையில் இடம்பெறுகையில், ‘இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்’ என்பதாக அவர்களது ரியாக்‌ஷன் இருக்கும்.

Advertisement

மொத்தப்படமும் ஒரு காரசாரமான ஆந்திரா மீல்ஸை கண்ணீர் பெருகப் பெருகச் சுவைத்துச் சாப்பிட்ட ‘எபெக்ட்’டை தரும். அது ‘புஷ்பா 2’வில் நிரம்பக் கிடைக்கிறது.

அதே நேரத்தில், இதில் வழக்கத்தைவிட்டு விலகிய காட்சியமைப்புகளும் உள்ளன. சமீபகாலமாகவே நாயகிக்கு அடங்கி நடப்பவனாக நாயகனை காட்டும் ‘ட்ரெண்ட்’ பெருகி வருகிறது. ‘அதை தரை லெவலுக்கு ஹேண்டில் பண்ணியிருக்காரு நம்மாளு’ என்று அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அவரது பாத்திரத்தை வார்த்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.

கறிக்குழம்பில் உப்பு அதிகம் என்று சிண்டிகேட் உறுப்பினர்கள் முன்னால் மனைவியாக வரும் ராஷ்மிகாவிடம் ‘கெத்தாக’ சொல்லிவிட்டு, அடுத்த நொடியே சமையலறைக்கு வந்து அவரது காலைப் பிடித்துவிட்டவாறே சமாளிப்பதாக ஒரு காட்சி வரும். அதே ரகத்தில் மேலும் சில காட்சிகளும் உண்டு.

Advertisement

ஒரு ஆக்‌ஷன் காட்சிக்கு முன்னால், ‘நாம் இப்ப என்ன செய்யணும்’ என்று நாயகன் நாயகியிடம் கேட்பதாகவும் ஓர் இடம் உண்டு. இப்படிப்பட்ட சித்தரிப்புகள் தெலுங்கு சினிமாவில் மிக அரிதாகவே நிகழும்.

போலவே, ஒரு பாடல் மற்றும் சண்டைக்காட்சி முழுக்கப் பெண் வேடமிட்டு வருகிறார் நாயகன். இதர நாயகர்கள் அது போன்ற காட்சிகளில் நடிக்க அல்ல, அதனை இயக்குனர் விவரிக்கையில் காது கொடுத்துக் கேட்கவே தயங்குவார்கள் என்பதுதான் நிதர்சனம். இப்படிச் சில ‘ப்ளஸ்’கள் படத்தில் உண்டு.

ஒரு தெலுங்கு படத்தைப் பார்ப்பதில் என்னவெல்லாம் சிக்கல்கள் உண்டு என்று மனதுக்குள் ஓட்டிப் பார்க்கிறோமோ அவை அனைத்தும் ‘புஷ்பா 2’வில் நிறையவே உண்டு. குறிப்பாக, இடிந்த கோட்டைக்குள் நிகழ்வதாக வரும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி வெறித்தனத்தின் உச்சமாக இருக்கிறது. அது போன்ற சில ‘மைனஸ்’கள் இதிலிருக்கின்றன.

Advertisement

’திருப்பதி மலைகளைச் சுற்றியுள்ள வனப்பிரதேசத்தில் நிகழ்ந்து வரும் செம்மரக்கட்டை கடத்தலை, அதன் பின்னிருக்கும் அரசியலை, அதனால் ஏற்படும் சட்டவிரோதச் செயல்பாடுகளை ஹீரோயிசத்துடன் அணுகுவது சரிதானா’ என்ற கேள்வியையும் சுமந்து நிற்கிறது இப்படம்.

‘பொழுதுபோக்காக மட்டுமே இப்படத்தை அணுக வேண்டும்’ எனும் பதில் படக்குழுவினருக்குச் சரியானதாக இருக்கலாம். போலவே, இக்கதையில் உண்மையின் சதவிகிதம் எத்தனை எனும் கேள்வியும் நிச்சயம் சர்ச்சையை எழுப்பக்கூடியது. அதையும் சில ரசிகர்கள் ‘மைனஸ்’ ஆகக் கருதக்கூடும்.

’கேஜிஎஃப் 2’வின் சாயல் நிறையவே உண்டு என்றபோதும், இப்படத்தில் திரைக்கதை ட்ரீட்மெண்டை ‘raw’வாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் சுகுமார்.

Advertisement

ஒரு வெற்றி பெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எப்படி உருவாக்கலாம் என்று நின்று நிதானித்துப் பல அம்சங்களைப் புகுத்தியிருக்கிறார். அதன்பிறகு படத்தொகுப்பு மேஜையில் எத்தனை நிமிடக் காட்சிகள், ஷாட்கள் வெட்டப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை.

அதையும் மீறிப் படம் திரையில் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடுகிறது. பார்வையாளர்கள் அதன் காரணமாக அயர்ச்சியுறுகின்றனரா அல்லது இயக்குனர் உருவாக்கிய கதாபாத்திரங்களின் இயல்புகளையும் அந்த உலக நடப்பையும் தெளிவாக உள்வாங்கிக் கொள்கின்றனரா என்பதற்கான பதில் படத்தின் வெற்றி மூலமாகத் தெரிய வரும்.

இது போக ‘புஷ்பா 3 உண்டா’ என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறது இப்படம்.
மேற்சொன்னவற்றைப் படித்தபிறகு, இந்தப் படத்தைக் குடும்பத்தோடு பார்க்கலாமா என்ற கேள்வி எழுவது இயல்பு.

Advertisement

முதல் நாள் முதல் காட்சியன்று அப்படியொரு ’ரிஸ்க்’கை சில பெற்றோர்கள் கையிலெடுத்திருந்ததையும் காண முடிந்தது. வீட்டுக்குச் சென்றபிறகு, ‘புஷ்பா 2’ சார்ந்து அக்குழந்தைகள் கேட்கும் கேள்விகளில் இருந்து அது தெரிய வரும். பதின்ம வயதுக் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர், அவர்களைத் தனியே படம் பார்க்க அனுப்பிவிட்டு தாங்கள் இன்னொரு நாள் செல்வது நல்லது.

‘பான் இந்தியா’ படமாக ’புஷ்பா2’வை முன்னிறுத்தியிருக்கிற காரணத்தால், அல்லு அர்ஜுன் ஜென்ஸீ தலைமுறையையும் கவர்ந்த ஒரு திரை நட்சத்திரம் என்பதால் இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது..!

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன