விளையாட்டு
KKR Captain | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகும் முன்னாள் சிஎஸ்கே வீரர்… யார் தெரியுமா?

KKR Captain | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகும் முன்னாள் சிஎஸ்கே வீரர்… யார் தெரியுமா?
வரும் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணியின் கேப்டனாக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அந்த அணியால் தக்கவைக்கப்படவில்லை. எனவே ஏலத்தில் பங்கேற்ற அவரை, ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
கேப்டன் இல்லாமல் ஏலத்தில் பங்கேற்ற கொல்கத்தா அணி, ரூ.23.75 கோடிக்கு வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுத்தது. அணியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் கேப்டனாக்கப்படலாம் என்றும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ரின்கு சிங்கும் கேப்டன்களாக நியமிக்கப்படலாம் என விமர்சகர்கள் தெரிவித்தார்கள். மேலும் ரசல் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக சீனியர் வீரரான அஜிங்க்யா ரஹானே கேப்டனாக்கப்படலாம் என ஆங்கில செய்தி நிறுவனமான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்துள்ளது.
ஏலத்தில் அஜிங்க்யா ரஹானே கொல்கத்தா அணியால் அடிப்படை விலையான 1.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ரஹானே இந்திய அணியில் தற்போது விளையாடவில்லை. ஆனால் நடைபெற்று வரும் சையத் முஷ்டக் அலி தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் கொல்கத்தா அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க, ரஹானேவை கேப்டனாகவும் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் தான் சீனியர் வீரரான ரஹானேவை கொல்கத்தா ஏலத்தில் எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ரஹானே இதற்கு முன்னர் ராஜஸ்தான் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு கம்பேக் கொடுக்கும் விதமாக ரஹானே 14 போட்டிகளில், 326 ரன்கள் குவித்து அனைவரையும் ரசிக்கவைத்தார். இந்த நிலையில் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.