இந்தியா
அடேங்கப்பா… அண்ணல் அம்பேத்கர் போலவே இருக்காரு.. ஆதிகலைக் கோல்விழாவில் நடந்த சுவாரஸ்யம்…

அடேங்கப்பா… அண்ணல் அம்பேத்கர் போலவே இருக்காரு.. ஆதிகலைக் கோல்விழாவில் நடந்த சுவாரஸ்யம்…
சென்னை – ஆதிகலைக் கோல்விழாவில் அண்ணல் அம்பேத்கர் வேடம்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பாக ஆதிதிராவிடர் & பழங்குடியினரின் தொன்மையை பறைசாற்றும் வகையில் ஆதி கலைக்கோல்விழா நடைபெற்றது. இதில் உணவு, உடை, கலாச்சாரம் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக தொன்மையான பல விஷயங்களையும், கலைகளையும் கொண்டு வர்றாங்க. இவ்ளோ பெரிய விழா எடுக்குறாங்க. தலைநகர் சென்னையில நடக்குற விழா. தமிழகம் முழுக்க கவனம் பெறும். ஆனா கூட்டம் வருமா? என பல தரப்பினரும் எழுப்பிய கேள்வி. ஆனா நடந்ததுதான் சுவாரஸ்யம். டிசம்பர் 1,2 (ஞாயிறு, திங்கள்) ஆகிய இரு தினங்களும் விழா நடைபெறும்னு தாட்கோ சார்பா அறிவிப்பு வெளியானது. ஆனா ‘பெஞ்சல்’ புயல் தாக்கத்தால் ஞாயிறு நடைபெறுகிற விழா ரத்தாகி ஒரே நாளாக திங்கள் நடைபெறும்னு அறிவிப்பு வெளியானது. திங்கள் மக்களுடைய வருகை இருக்குமான்னு எல்லாரும் யோசிச்சுக்கிட்டு இருந்த சமயத்துலதான் ஒரு வரலாற்று நிகழ்வில் தங்களுடைய பங்கும் இருக்கணும்னு நினைச்சு மக்களின் வருகையும் கணிசமாக இருந்தது.
ஒயிலாட்டம், சிங்கரி மேளம், ரத்தக்காவடியாட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகளும், 100-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், 800 மேற்பட்ட இசைக்கருவிகள், நாடக கலைஞர்களின் ஆடைகள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை காண வந்த மக்கள் ஒவ்வொருவரும் ஓவியங்களையும், இசைக்கருவிகளையும் பார்த்து, பார்த்து சிலாகித்ததை நம்மால் காண முடிந்தது. ஒவ்வொரு கருவிகள் குறித்தும் அதில் தேர்ந்த இசைக்கலைஞர்களிடம் கேட்டு தெரிந்தும் கொண்டு அதை இசைத்து பார்த்தும் மகிழ்ந்தனர்.
நிகழ்வில் நடந்த இன்னொரு முக்கியமான சுவாரஸ்யம் என்றால் அண்ணல் அம்பேத்கர் வேடமணிந்து வந்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த லெட்சுமணன்தான். பொதுமக்கள் அவரை சூழ்ந்துக்கொண்டு அவரிடம் உரையாடுவதும், புகைப்படம் எடுப்பதுமாக இருந்தனர். அவரிடம் இது குறித்து கேட்டபோது, “இயல்பிலேயே நான் நாடக கலைஞன் தான். இதுவரைக்கும் அம்பேத்கர் வேடம் மட்டும்தான் அணிந்திருக்கேன். தமிழ்நாடு அரசு எடுத்த இந்த முன்னெடுப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நான் வேடமணிந்து வந்ததுக்கான நோக்கமே ‘கலையும் & கல்வியும் சேர்ந்தா இந்த நாட்டுல, சமூகத்துல மாற்றம் உண்டாகும்’னு நம்புறேன். அதனாலதான் இங்க என்ன பார்க்குற மகிழ்ச்சியோட வந்து பேசுறத பாக்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நீங்க நல்லா கவனிச்சிங்கனா தெரியும், இப்ப இருக்க தலைமுறைகள் கூட இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளில் தங்களுடைய பங்கேற்பு இருக்கணும்னு நினைக்கிறாங்க. அத பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்காங்க. அத பத்தி பேசுறாங்க, கேக்குறாங்க. ஒரு உரையாடல் தொடங்குது.. சொல்லப்போனா இது ஒரு நல்ல மாற்றம். புதைந்துபோன இதுபோன்ற எத்தனையோ கலைகளையும், வரலாறுகளையும் இந்த நாகரிக தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்வதன் மூலமாக இந்த மண்ணுக்கான தன்மையை, இங்கு வாழ்ந்த மனிதர்களின் மாண்பை எளிதாக கடத்திவிட முடியும்.
இன்னும் தமிழர்களின் வரலாறுகளை, தமிழர்கள் வாழ்வியலை அடையாளப்படுத்தும் ஆதி கலைக்கோல் விழாவைப்போல இன்னும் பல விழாக்கள் இங்கு நடைபெற வேண்டும். வடிவேலு தனது படத்தில் நகைச்சுவையாக ‘வரலாறு மிக முக்கியம் அமைச்சரே’ இந்த வசனத்தை கூறினாலும் இதுதான் மிக எதார்த்தமான உண்மை.