இந்தியா
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ கட்சி தொடங்கிய பின் விஜய் பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ கட்சி தொடங்கிய பின் விஜய் பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி
சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளான இன்று (6ம் தேதி) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகம் சென்னையில் வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.
இந்த நிகழ்வுக்கு முன்பாக நடிகர் விஜய், அரசியல் கட்சி துவங்கி தனது முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் அவர் தனது கொள்கைகளையும் விளக்கினார். மேலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்றும், பாசிசத்தை எதிர்ப்பவர்களை ‘அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் என்ன பாயாசம்’ எனவும் விமர்சித்துப் பேசியிருந்தார்.
மேலும், திமுக, பாஜக கட்சிகளை அரசியல் எதிரி என்றும், கொள்கை எதிரி என்றும் பேசியிருந்தார். இதில், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என விஜய் பேசியது திருமாவளவனை குறிவைத்துத்தான் என பரவலாக பேசப்பட்டது. திருமாவளவன் விஜய் கூட்டணி என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. இதற்கு திருமாவளவன் தெளிவான பதிலை தெரிவித்தார். மேலும், பாசிச எதிர்ப்பாளர்களை பாயாசம் என விமர்சித்த விஜயின் கருத்துக்கும் திருமாவளவன் கடுமையான எதிர்வினையை கொடுத்திருந்தார்.
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்திருந்தார். பிறகு அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்று அறிவித்தார்.
திருமாவளவனின் அறிவிப்பைத் தொடர்ந்து பல யூகங்கள் எழுந்தன. அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில்,
“சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது” என விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பதில் அளித்தார்.
அதேபோல், இன்று விசிக தலைவர் திருமாவளவன்,
சூது அறிந்தே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க சென்னை உள்ள வர்த்தக மையத்திற்கு வந்துள்ளார். விஜய் கட்சி துவங்கியபிறகு பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. எனவே இந்நிகழ்ச்சியில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.