Connect with us

இந்தியா

காங்கிரஸ் எம்.பி.யின் சீட்டில் கட்டுக் கட்டாய் பணம்! நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது?

Published

on

Loading

காங்கிரஸ் எம்.பி.யின் சீட்டில் கட்டுக் கட்டாய் பணம்! நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது?

மூத்த காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வியின் இருக்கையில் இருந்து பணக் கட்டுகள் எடுக்கப்பட்டதால், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவை சபாநாயகரும் துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். இது தேசிய அரசியலில் விவாதப் புயலை கிளப்பியுள்ளது.

கடந்த நவம்பர் 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. தொழிலதிபர் அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

அத்துடன் மணிப்பூர் கலவரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, ராகுல்காந்தியை உத்தரபிரதேச சம்பல் பகுதியில் நுழையவிடாமல் தடுத்தது போன்ற பிரச்சினைகளால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

நேற்றும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடரவே, நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று மாநிலங்களவையும் எதிர்க்கட்சிகள் அமளியால் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 6) காலை 11 மணிக்கு அவை தொடங்கியதும் மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கர் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisement

அவர், “நேற்றைய தினம் (டிசம்பர் 5) அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு மாநிலங்களவை முழுவதும் வழக்கமான பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்பியும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் இருந்து கட்டுக்கட்டாக ​​பணம் எடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. கரன்சி நோட்டுகளுக்கு யாராவது உரிமை கோருவார்கள் என்று தான் எதிர்பார்த்தேன். ஆனால் இதுவரை யாரும் அதை உரிமை கொண்டாடவில்லை. உடனடியாக இதுதொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.

இது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் தரப்பில் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சபாநாயகர் தன்கரின் நடவடிக்கையை விமர்சித்தார். அவர், “விசாரணை முடிவதற்குள் உறுப்பினரின் பெயரைக் குறிப்பிடக்கூடாது” என்று தெரிவித்தார்.

“பணம் எடுக்கப்பட்ட இருக்கை எண், அதன் உறுப்பினர் பெயரை சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். அதை தெரிவிக்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்? அதில் என்ன பிரச்சனை? அவைக்குள் நோட்டு மூட்டைகளை எடுத்துச் செல்வது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கார்கேவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இது, பா.ஜ.க.வின் வழக்கமான திசை திருப்பும் வியூகம். நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறோம். ஆனால் அது பெரிய பிரச்சினையாக வெடிக்கும் என கருதி, அதிலிருந்து திசைதிருப்ப பா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டத்தொடரை ஒத்திவைக்க மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததை பார்த்தேன்.

Advertisement

மோடி – அதானி ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவை நடத்த விடமாட்டீர்கள் என்றால், ராஜ்யசபாவை நடத்த விடமாட்டோம் என்பது பாஜக அரசின் உத்தியாக உள்ளது.

நாங்கள் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்குகிறோம். ஆனால் எந்த விவாதத்தையும் நடத்த அரசு விரும்பவில்லை“ என ஜெய்ராம் ரமேஷ் பேசினார்.

இதற்கிடையே குற்றஞ்சாட்டப்பட்ட அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், “இதைப் பற்றிக் கேட்கவே வினோதமாக இருக்கிறது. டிசம்பர் 5 மதியம் 12.57 மணிக்கு நான் மாநிலங்களவைக்குள் நுழைந்தேன். அப்போது ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன். அவை தொடங்கிய சில நிமிடங்களில் மதியம் 1 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. . மதியம் 1 முதல் 1:30 வரை நான் அயோத்தி பிரசாத்துடன் கேண்டீனில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டேன். மதியம் 1:30 மணிக்கு நான் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினேன். ஆக, நேற்று நான் மாநிலங்களவையில் 3 நிமிடமும், கேண்டீனில் 30 நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளேன்.

Advertisement

இது போன்ற விஷயங்கள் கூட அரசியலாக்கப்படுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. உண்மையில் யார் வேண்டுமானாலும், யாருடையை இருக்கையிலும், எதை வேண்டுமானாலும் வைத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்ப முடியும். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதற்கு தீர்வாக எம்.பி..க்கள் ஒவ்வொருவரும் இருக்கையைப் பூட்டி, சாவியை தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருக்கை அமைக்கப்பட வேண்டும். இந்த குற்றச்சாட்டில் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னதாக நடத்தப்படும் விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் பாதுகாப்பு ஏஜென்சிகளில் ஏதேனும் தவறு இருந்தால் அதுவும் முழுமையாக நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட வேண்டும்” என அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தங்களுடன் எந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்லலாம்? அதிகப்பட்சமாக எவ்வளவு பணம் கொண்டு செல்லலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள விதியின் படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் அல்லது தனிப்பட்ட உடமைகளை எடுத்துச் செல்வதை முற்றிலும் தடைசெய்யும் வெளிப்படையான சட்டம் எதுவும் இல்லை என்றாலும், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் எதைக் கொண்டு வரலாம், எதைக் கொண்டு வரக்கூடாது, குறிப்பாக பணத்தைப் பயன்படுத்துவது குறித்து கடுமையான வழிகாட்டுதல்கள் உள்ளன.

அதன்படி எம்.பி.க்கள் தங்கள் பர்ஸில் அல்லது பணப்பையில் பணத்தை எடுத்துச் செல்வதைத் தடைசெய்யும் முறையான விதி எதுவும் இல்லை. எவ்வாறாயினும், சபைக்குள் அதிகமாக பணத்தை காட்சிப்படுத்துவது அல்லது பயன்படுத்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்குள் பணத்தைப் பயன்படுத்துதல் அல்லது காட்சிப்படுத்துதல் என்பது அதன் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என கருதப்படுகிறது.

Advertisement

அதேவேளையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையின் செயல்பாட்டில் தலையிடாத வகையில், சிறிய பணப்பை அல்லது அத்தியாவசிய தனிப்பட்ட உடமைகளைக் கொண்ட பை போன்ற தனிப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பெண் எம்.பி.க்கள் தோளில் தொங்கும் பர்ஸ்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் இந்த பொருட்களை அவை நடவடிக்கைக்கு எந்த வகையிலும் இடையூறு செய்யாமலும், கண்ணியத்தை காக்கும் வகையிலும் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிஷேக் மனு சிங்வி இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக பணியாற்றி வரும் அவர், ராஜ்ய சபா எம்.பியாக தெலுங்கானாவில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் 1959ஆம் ஆண்டு பிறந்த சிங்வி, இங்கிலாந்திற்கான இந்திய தூதராக பணியாற்றிய பிரபல வழக்கறிஞர் லக்ஷ்மி மால் சிங்வியின் மகன் ஆவார்.

Advertisement

தனது கல்லூரி படிப்பை டெல்லியின் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பயின்ற அவர், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.

சிங்வி 34 வயதிலேயே உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 37 வயதில் இந்தியாவின் இளம் வயது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் (ASG) மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

தனது தந்தையின் வழியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சிங்வி 2001ஆம் ஆண்டு முதல் தேசிய செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு முதன் முறையாக ராஜ்ய சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2018ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இருந்தும், 2024ல் தெலுங்கானாவில் இருந்து ராஜ்ய சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement

முன்னதாக கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து விலகினார்.

2014 ஆம் ஆண்டில், தனது அலுவலகத்தை நடத்துவதற்கான செலவுக் கோரிக்கைகளை ஆதரிக்கும் ஆவணங்களை வழங்கத் தவறியதற்காக சிங்விக்கு வருமான வரித் தீர்வு ஆணையத்தால் ரூ. 57 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வரும் சிங்வியின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள்.

Advertisement

இந்த ஆண்டு தெலுங்கானாவில் இருந்து ராஜ்யசபா பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது, ​​பிரமாணப் பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு 2022-23 நிதியாண்டில் ரூ.360 கோடி என்றும், 2021-22 நிதியாண்டில் ரூ.291 கோடி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் மூத்த வழக்கறிஞராக உள்ள அவரது இப்போதைய சொத்து மதிப்பு ரூ. 650 கோடி இருக்கும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தான் பல்வேறு பிரச்சனைகள் குறித்து தீவிரமாக கருத்து தெரிவித்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீப் தன்கர்.

பணக்கட்டுகள் அபிஷேக் சிங்வி இருக்கையில் இருந்ததற்தான உண்மையான காரணம் விசாரணைக்கு பின்பு தான் தெரியவரும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன