இந்தியா
கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்! இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்! இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017-ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
2017-ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் அதே ஆண்டு சாலை விபத்திலும், அவரைத் தொடர்ந்து கோடநாடு பங்களாவின் சிசிடிவி ஆப்ரேட்டராக பணியாற்றிவந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டும் இறந்தனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதேசமயம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீஸ் ஆகியோர் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, கோடநாடு பங்களா மேலாளர் உள்ளிட்டோரையும் விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கோடநாடு பங்களா மேலாளரை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது. எனவே நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணையின் போது, பங்களாவில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா மற்றும் இளவரசிக்குத்தான் தெரியும் என்பதாலும், தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இல்லாததாலும், அவர்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன், அதிமுக பிரமுகர் சஜீவன் ஆகியோரையும், சம்பவத்தின் போது மாவட்ட ஆட்சியராக இருந்த சங்கர், எஸ்பியாக இருந்த முரளி ரம்பா ஆகியோரையும் விசாரிக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.