இந்தியா
தமிழ்நாடு வரும் மத்தியக் குழு.. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது

தமிழ்நாடு வரும் மத்தியக் குழு.. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது
வங்கக் கடலில் உருவாகி, புதுச்சேரியில் கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஒருபுறம், பல இடங்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மறுபுறம் அணைகள் நிரம்பி வெளியேற்றப்பட்ட நீரால் மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்தன. இதனால், மக்கள் தங்களின் அன்றாட வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். பலரின் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது, கால்நடைகள் இறந்தது என பெரும் இழப்பில் சிக்கித் தவிக்கின்றனர்.
ஃபெஞ்சல் புயல் தற்காலிக நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். தொடர்ந்து புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, குடும்ப அட்டைக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் என்றும், கால்நடைகள் இறப்பு, வீடு இழந்தோருக்கு இழப்பீடு உள்ளிட்டவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கிடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட இன்று மாலை மத்தியக் குழு தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறது. இந்தக் குழுவில், மத்திய உள்துறை இணைச் செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 8 பேர் இருக்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முதலில் சந்திக்கும் மத்திய குழுவினர், புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகின்றனர்.