இந்தியா
“நான் இருக்கும்வரை மதம், சாதிவெறி எண்ணத்தை நிறைவேற்ற முடியாது” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

“நான் இருக்கும்வரை மதம், சாதிவெறி எண்ணத்தை நிறைவேற்ற முடியாது” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை எழும்பூரில் அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி, தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்பேத்கருக்கு தமிழ்நாடு அரசு செய்த கவுரவங்களை பட்டியலிட்டார். அப்போது, திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டதாக முதலமைச்சர் கூறினார்.
விழாவில், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். இதேபோன்று, தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதார அட்டை, வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கிய அவர், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திமுக அரசு செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், பெரியார், அம்பேத்கர் கொள்கை உரம்பெற்ற இந்த தமிழக மண்ணில் மதம் மற்றும் சாதி வெறி எண்ணத்தை நிறைவேற்ற முடியாது. இந்த ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாட்டில் அதை நீங்கள் நிறைவேற்ற முடியாது என்றும் பேசினார்.
தமிழ்நாட்டில் சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை அம்பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்றும் முதலமைச்சர் கூறினார்.