இந்தியா
“முதலமைச்சர் – அதானி சந்திப்பு : பொய் தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை” – செந்தில் பாலாஜி

“முதலமைச்சர் – அதானி சந்திப்பு : பொய் தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை” – செந்தில் பாலாஜி
தொழிலதிபர் அதானியை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்தது போலவும், அதிகவிலை கொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் வெளியான தகவலுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அடிப்படை உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடு அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியின் போது அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி, ஒரு யூனிட்டுக்கு 7.01 ரூபாய் சூரிய ஒளி மின்சார கட்டணத்தை எதிர்த்து திமுக ஆட்சியில் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு மத்திய அரசின் கட்டாயத்தின் அடிப்படையில், சூரிய மின்சக்தி கழகத்திடம் இருந்து பிற மாநிலங்களை போல, சூரிய ஒளி மின்சாரத்தை பெற தமிழ்நாடு அரசும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அது தொடர்பாக, 2024 ஆம் ஆண்டு நிறுவனத்தின் பிரதிநிதியை முதலமைச்சர் சந்தித்தாக கூறுவது தவறானது எனத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சிக்கு இணக்கமாக செயல்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவரை சந்தித்தார், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார் என பொய் தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.