இந்தியா
“2026 தேர்தல் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்” – அம்பேத்கர் புத்தக விழாவில் ஆதவ் அர்ஜுனா

“2026 தேர்தல் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்” – அம்பேத்கர் புத்தக விழாவில் ஆதவ் அர்ஜுனா
சென்னையில் இன்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மேனாள் நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “கால சூழ்நிலையால் திருமா மேடையில் இல்லை. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கும். தலித் அல்லாத விஜய் இந்த நூலை வெளியிடுவதன் மூலம் திருமாவளவனின் கனவு இன்று நிறைவேறியுள்ளது. மன்னர் ஆட்சியை இங்கு ஒழிக்க வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் இங்கு உருவாகக் கூடாது.
கருத்தியல் சிந்தனை கொண்ட ஒருவர் தான் முதலமைச்சராக வர வேண்டும். தமிழ்நாடு ஊழலைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. அம்பேத்கர் கொள்கையைப் பேசுபவர்கள் ஏன் அவரை மேடையேற்றவில்லை.
மன்னர் பரம்பரையை உருவாக்க இனி தமிழகம் ஒருபோதும், இடம் தராது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. இன்று மன்னர் பரம்பரையை ஒழிப்பதற்கு அம்பேத்கரின் சிந்தனைகள் நமக்குத் தேவைப்படுகிறது. 2026 தேர்தலுக்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் 2 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடையாது.
அகிலேஷ் யாதவ் ஒரு தலித்தைப் பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், தமிழகத்தில் பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை நிறுத்த முடியவில்லை. ஒன்றே முக்கால் கோடி தலித் மக்கள் கொண்ட இயக்கம் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு.
சினிமா துறையில் அவரை (விஜய்) சுற்றி 2000 கோடி வியாபாரம் உள்ளது. அதைக் கைவிட ஒரு தைரியம் வேண்டும். ஏன் சினிமாத்துறை ஒரு நிறுவனத்தால் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு தலித் முதல்வராக வர வேண்டுமென முதலில் குரல் கொடுத்தவர் விஜய். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை முதலில் கூறியவர் விஜய்.
சாமியார்களில் நல்ல சாமியார்கள், போலி சாமியார்கள் இருக்கிறார்கள். காஞ்சி மகா பெரியவர் நல்லவர். ஆனால், போலி சாமியார்கள் இங்கு அதிகமாக இருக்கிறார்கள். அதேபோல், திராவிடம் நல்லது.
திராவிடம் என்றால் ஒன்று தான், ‘எல்லோரும் சமம்’ இதே தான் தமிழ்தேசியமும் சொல்கிறது. பிரபாகரனும் எல்லோரும் சமம் என்று தான் சொல்கிறார்.
வேங்கைவயலில் தண்ணீரில் மலம் கலந்ததைக் கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணம் காவல்துறை அல்ல. ஒரு கான்ஸ்டெபில் அதனைக் கண்டுபிடித்துவிடுவார். ஆனால், ஜாதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ., ஒரு அமைச்சர் இது தான் காரணம்.
1 கோடியே 40 லட்சம் பேர் தலித்கள். ஆனால், ஆட்சியிலும் பங்கு அதிகாரித்திலும் பங்கு என்று கேட்டால், தவறு என்கிறார்கள். வெறும் 25 சதவீதம் மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி நீங்கள் பெரியக் கட்சி என்கிறீர்கள். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வேண்டும். அதில் தலித்களுக்குப் பங்கு வேண்டும். 69% சமூக நீதியை உருவாக்கிவிட்டோம். ஆனால் அரசியலில் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றால் விடவே மாட்டார்கள். மன்னர் ஆட்சி தான் இங்கு இருக்கிறது. மன்னர் ஆட்சியைக் கேள்விக்கேட்டால் சங்கி எனக் கூறிவிடுவார்கள்.
அதிகாரத்தை நோக்கிச் செல்லுங்கள்; இதுதான் அம்பேத்கர் நமக்குச் சொல்லிக் கொடுத்தது; அதை நோக்கி நாம் செல்வோம். தலித் மக்கள் பிரச்சனையை தலித்துகள் மட்டும் பேசக்கூடாது. விஜய் வேங்கைவயல் கிராமத்திற்கு நேரில் செல்ல வேண்டும். ஏழைகள் ஒன்று சேர்ந்தால் உங்களைத் தூக்கி எறிவார்கள்; நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிப்போம்” என்று பேசினார்.