நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 07/12/2024 | Edited on 07/12/2024

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டால் தப்பு என்கிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். பின்பு பேசிய விஜய், “திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்பொழுது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்” என்றார். இவர்களது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Advertisement

இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் அமீர், “செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் மக்களுக்கு என்றைக்குமே நண்மை தராது. ஆதவ் அர்ஜூனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல” என தனது கருத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.