Connect with us

இந்தியா

நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர்… நியமனம் பெற்ற 10 நாட்களில் பணியிடை நீக்கம்!

Published

on

Loading

நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர்… நியமனம் பெற்ற 10 நாட்களில் பணியிடை நீக்கம்!

ஊழல் புகாரில் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா, நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று (டிசம்பர் 7) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா, கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கினார்.

Advertisement

ரயில் நிலையத்துக்கு காரில் சென்றபோது அவரை மடக்கி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.11.7 லட்சம் பணம் கட்டுகட்டாக கைப்பற்றினர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன்காரணமாக காத்திருப்போர் பட்டியலுக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில், அடுத்த 2 வாரத்தில், பணி உயர்வு பெற்று திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக கடந்த மாதம் 26ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

இது திருநெல்வேலி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisement

பொதுவாக அரசு அலுவலர்கள், அதிகாரிகள் இது போன்று லஞ்ச புகாரில் சிக்கி வழக்குப் பதிவு செய்யப்பட்டால், நீண்ட நாள் விசாரணையின் முடிவுக்குப் பிறகே அவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்படும்.

ஆனால், ஜஹாங்கீர் பாஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டே வாரத்தில் மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டது ஏன்? எப்படி? என சமூக ஆர்வலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அவரது நியமனத்திற்கு எதிராக பாமக தலைவர் ராமதாஸ், தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement

இதற்கிடையே திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி பொறுப்பேற்க வந்த ஜஹாங்கீர் பாஷாவை, பொறுப்பேற்க விடாமல் மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா அதிரடியாக திருப்பி அனுப்பியுள்ளார்.

அப்போது அவரிடம், ’உங்கள் மீது ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநரிடம் ஆட்சேபனை கடிதம் வாங்கிவிட்டு பணியில் சேர வாருங்கள்” என்று ஆணையர் உத்தரவிட்டார்.

ஜஹாங்கீர் பாஷாவை திருநெல்வேலி மாநகராட்சியில் பொறுப்பேற்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த 2ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக ஜஹாங்கீர் பாஷாவை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன