பொழுதுபோக்கு
பண கஷ்டத்தில் எம்.ஜி.ஆர்: ரசிகர்களுக்கு பொங்கல் பணம் கொடுக்க அவசரத்தில் நடித்த படம்!

பண கஷ்டத்தில் எம்.ஜி.ஆர்: ரசிகர்களுக்கு பொங்கல் பணம் கொடுக்க அவசரத்தில் நடித்த படம்!
ரசிகர்களுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்கு கொடுக்க, பணம் குறைவாக உள்ளது என்று யோசித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், இதற்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டு, அந்த படத்திற்கான முழு சம்பளத்தையும் ஒரே பேமண்டமாக வாங்கியுள்ளார்.தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். சினிமாவில், ஆட்சி செய்த அவர், ஒரு கட்டத்தில் தனி கட்சி தொடங்கி அரசியலில் தொடர்ந்து 3 முறை முதல்வராக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை வகுத்து அதில் வெற்றிக்கொடியை காட்டிய எம்.ஜி.ஆர், பலருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.சினிமாவை தாண்டி பொதுமக்களுக்கும் தன்னால் இயன்ற அளவு உதவிகளை செய்துள்ள எம்.ஜி.ஆர். முதல்வர் ஆன பின்பு, மக்கள் நலனுக்காக பல திட்டங்களை வகுத்துள்ளார். மேலும் தனது ரசிகர்கள், அன்பானவர்கள், தன்னுடன் இருப்பவர்கள் என அனைவரையும் பாசத்துடன் அரவணைக்கும் குணம் கொண்ட எம்.ஜி.ஆர், ஒருமுறை, தன்னை சார்ந்தவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு படத்தில் நடித்துள்ளார்.பொங்கல் பண்டிகை நெருங்கிய ஒரு ஆண்டில், எம்.ஜி.ஆர் எதோ யோசனையில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் என்ன சோகமாக இருக்கீங்க, என்று கேட்க, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று எம்.ஜி.ஆர் சமாளித்துள்ளார். ஆனால் இவர் யோசனையில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட அவர், மீண்டும் கேட்க, ஒன்றும் இல்லை, பொங்கல் பண்டிகை வருது, எல்லோருக்கும் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் இப்போது பணம் கம்மியாக இருக்கிறது அதன் என்ன செய்வது என்று யோசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.இதை கேட்ட அந்த நபர், இதுக்கு ஏன் நீங்க கவலைப்படுறீங்க, நீங்க மட்டும் சரி என்று சொல்லுங்க, ஒரு படம் புக் பண்ணி, சம்பளத்தை ஒரு பேமண்ட்டாக வாங்கிவிலாம் ஒரு தயாரிப்பாளர் உங்களிடம் டேட் கேட்டுக்கொண்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார். யார் அது என்று எம்.ஜி.ஆர் கேட்க, என் மீது நம்பிக்கை இருக்குல்ல, நீங்க சரி என்று சொல்லுங்கள் நான் போய் வாங்கி வருகிறேன் என்று அந்த நபர் சொல்ல, எம்.ஜி.ஆரும் சரி என்று கூறியுள்ளார்.அதன்பிறகு அந்த நபர் தயாரிப்பாளரிடம் பேசி, எம்.ஜி.ஆர் சம்பளத்தை ஒரே பேமண்டாக 14 லட்சம் வாங்கி வந்துள்ளார். அவ்வாறு எம்.ஜி.ஆர் நடித்த படம் தான் நான் ஏன் பிறந்தேன். இந்த படத்திற்கு வசனம் எழுதிய வியட்நாம் வீடு சுந்தரம் தான் எம்.ஜி.ஆருக்கு அந்த சம்பளத்தொகை முழுவதும் வாங்கிக்கொடுத்த நபர். 1972-ம் ஆண்டு வெளியான நான் ஏன் பிறந்தேன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த்து குறிப்பிடத்தக்கது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“