இந்தியா
பல லட்சம் மதிப்புடைய விசைப்படகு… என்ன என்ன வசதி உள்ளது..? விவரிக்கும் மீனவர்…

பல லட்சம் மதிப்புடைய விசைப்படகு… என்ன என்ன வசதி உள்ளது..? விவரிக்கும் மீனவர்…
பல லட்சம் மதிப்புடைய விசைப்படகு… என்ன என்ன வசதி உள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடிப்பதற்கு நாட்டுப்படகு, சிறிய விசைப்படகு, பெரிய விசைப்படகு, ஆழ்கடல் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ரூ.1 கோடி மதிப்புடைய ஆழ்கடல் படகு இங்கு மீன்பிடி தொழில் செய்ய முடியாததால் நாகப்பட்டினம், கன்னியாகுமரி மற்றும் கொச்சி போன்ற இடங்களில் வைத்து மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க சென்றுவிட்டு மறுநாள் காலை கரை திரும்புவார்கள். தங்களுக்கு தேவையான ஐஸ்கட்டிகள், டீசல், தண்ணீர், சமையல் பொருட்களின் அனைத்தும் எடுத்துச் செல்வார்கள். ஒருநாள் மீன்பிடிப்பு முறையில் வாரத்தில் மூன்று நாட்கள் மீன்பிடிக்க செல்வது வழக்கமாக வைத்துள்ளனர். இதில் பெரும்பாலும் மரத்தினால் ஆன பெரிய வகை விசைப்படகுகள் பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை ரூ.25 லட்சம் ஆகும். 60 அடி நீளம், 16 அடி அகலம் இருக்கும். குறைந்தபட்சம் 600 லிட்டர் டீசல் தேவைப்படும். 8 மீனவர்கள் இணைந்து மீன்பிடிக்க செல்வார்கள். மீனவர்கள் ஒருவருக்கு தலா ரூ.3000 சம்பளமாக வழங்கப்படுகிறது.
கடலில் இருந்து வலையை இழுக்கும் போது படகின் பின் பகுதி வழியாக இழுக்கப்படுகிறது. வலையை இழுக்கப் பயன்படும் கருவி “வின்ச் வீல்” என்று அழைக்கப்படுகிறது. மீன்களைப் பிடித்து படகிற்கு கீழ் 60 ஐஸ் பெட்டிகள் வைக்கும் அளவிற்கு இடம் உள்ளது. இதில் மீன்களை தனித்தனியாக ஐஸ் போட்டு வைத்துவிட்டு மீண்டும் வலை கடலுக்குள் வீசுகின்றது.
இப்படகில் வாக்கிடாக்கி மற்றும் ஜிபிஎஸ் கருவி இருப்பதால் தகவல் பரிமாறவும், தங்களுடைய படகிற்கு ஆபத்து ஏற்படும்போது சக மீனவர்களை அழைக்கவும், கடற்படை அதிகாரிகளை உதவிக்கு அழைக்க முடியும். மேலும், லைஃப் ஜாக்கெட் போன்ற உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது. டிரைவரின் அறையில் சிறிய அளவிலான தங்கும் இடமும், அதன் அருகில் சமைப்பதற்கான இடமும் உள்ளது. மழை நேரத்தில் மழையில் நனையாமல் இருக்கவும் இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை கரைக்கு ஏற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்கின்றனர்.
“மரப்படகில் பிரச்சினை என்னவென்றால் அவ்வப்போது அடியில் உடைந்து கடல்நீர் உள்ளே சென்று மூழ்கும் நிலை ஏற்படும். இதனால் பைபர் படகு பயன்படுத்தினால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாது” என விசைப்படகு உரிமையாளர் இனாசி முத்து கூறினார்.