Connect with us

இலங்கை

வடக்கில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

Published

on

Loading

வடக்கில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி, நாவற்காடு உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் வடிந்தோடாமையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

 தேங்கிய மழைநீரை வெளியேற்ற தடுப்பணையை திறந்தால் உவர்நீர் நிலத்தை நோக்கி பாயும் என உள்ளூர் அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

 விளைநிலங்களை சூழ்ந்துள்ள நீரில் இறங்கி வாழ்வாதாரத்தை காக்குமாறு அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்திய நாவற்காடு கிராம மக்கள், தண்ணீர் வடியாமையால் வரணி பகுதியில் சுமார் 40,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி பிரதேசத்தின் பல கிராமங்களில் சுமார் 4,000 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் நெல் விவசாயமே எனவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

 “அனுர அரசே கண்திற”, “விவசாயத்தை அழிக்காதே”, “வாழ வழிவிடு”, “விவசாயிகளின் தலைவிதி மாறாதா?” என கோசமிட்டவாறு தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள் மத்தியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விவசாயி ஒருவர், தொண்டமனாறு தடுப்பணை திறக்கப்படாவிடின், தங்களின் நிலங்களுக்குள் தண்ணீர் வராமல் தடுப்பணையை அமைப்பதே அவர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி எனக் குறிப்பிட்டார்.

 “தொண்டமனாறு தடுப்பணையை திறந்து தண்ணீரை கடலுக்கு போகவிடாமல் நீங்கள் தடுத்தால் தென்மராட்சி கிழக்கு பிரதேசத்தில் பல ஊர்களில் இருந்து வரும் நீரை வரணி பிரதேசத்திற்குள் வராமல் தடுக்கும் தடுப்பணையை நாங்கள் அமைப்போம். 

இதனைத் தவிர வேறு வழியில்லை. அந்த காலத்தில் நீரை எங்கள் பிரதேசத்தின் ஊடாக சென்று கடலில் சேரும் வகையில்தான் வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது நீர் குளமாக தேங்கி நிற்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. 

Advertisement

ஆகவே நாங்கள் அடுத்த கட்டமாக தடுப்பணையை அமைப்போம். எங்களுக்கு வேறு வழியில்லை.”

கடந்த வருடங்களை விட வடமாகாணத்தில் பெய்த அதிக மழையால் தண்ணீர் விவசாய நிலங்களில் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், இந்த நிலைமை தொடருமானால் தாம் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் எனவும் மற்றொரு கிராமவாசி அச்சம் வெளியிட்டார். 

 “இப்படி ஒருநாளும் நீர் தேங்கி நிற்பதில்லை. சிறியளவில் தேங்கும்போது தடுப்பணையை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் இந்த அதிகூடிய மழை காரணமாக கழுத்து உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது. கடல் மட்டம் உயர்வாகவுள்ளதாகவும் நில மட்டம் தாழ்வாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

இந்த பிரதேசத்தின் வாழ்வாதாரம் விவசாயம்தான். இப்படியே போனால் பிச்சைதான் எடுக்க வேண்டும்.”

தொண்டமனாறு பாலத்தின் கீழுள்ள தடுப்பணை திறக்கப்படாததால் வரணி பகுதியில் விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் கடலை சேர்வதில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அணையை திறந்தால் கடல் நீர் நிலத்தை நோக்கி வருமென அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன