விளையாட்டு
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வியை மறுத்த தாலிபான் – குரல் கொடுத்த ரஷீத் கான்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வியை மறுத்த தாலிபான் – குரல் கொடுத்த ரஷீத் கான்
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷீத் கான், தனது நாட்டில் ஆளும் தாலிபான் அரசாங்கத்தால் பெண்கள்மீது விதிக்கப்படும் அநீதி தடைகளின் மீது தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில், ஆஃப்கானிஸ்தானில் பேறுகால மருத்துவ உதவி மற்றும் நர்சிங் பாடங்களைப் படிக்க பெண்களுக்கு தடை விதித்து தாலிபான் அரசு முடிவெடுத்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய ரஷீத் கான், அதிகாரிகள் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கல்வியை எவரிடமும் மறுக்க முடியாது என்பதை வலியுறுத்திய அவர், பெண்களிடம் கல்வி இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது சமூக வலைதள பக்கத்தில், “கல்வி பெறுவது ஒவ்வொரு முஸ்லிம் ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமை. எனது சகோதரிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவத் துறைகள் இனி கிடைக்காது என்று வந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமாகவும் ஏமாற்றத்துடனும் இருக்கிறேன். அவர்களது சோகமான படங்களை சமூகவலைதளத்தில் பார்ப்பது மிகுந்த வலி அளிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தானின் வளர்ச்சியின் அடிப்படை கல்வியில் தான் ஆரம்பமாகிறது என்பதைக் குறிப்பிடும் ரஷீத், பெண்களும் சமூதாயத்தில் எந்தத் துறையிலும், குறிப்பாக மருத்துவத்தில், தங்கள் பங்களிப்பை வழங்கும் உரிமையைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“இந்த முடிவு திரும்பப் பெறப்படும் என நான் ஆவலுடன் நம்புகிறேன். திருக்குரான் வழிகாட்டும் நியாயமான முறைகளின் அடிப்படையில் பெண்களுக்கு கல்வி அளிக்க வேண்டும்.” எனத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
“ஆஃப்கானிஸ்தான் இன்று மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. நாட்டுக்கு அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக மருத்துவத்துறையில் நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாக உள்ளது. பெண்களின் சுகாதாரத்தை மற்றும் மரியாதையை நேரடியாகப் பாதிக்கும் இன்றைய நிலை மிகவும் கவலையூட்டுகிறது. சகோதரிகளுக்கும் தாய்மார்களுக்கும் அவர்களின் தேவைகளை உணர்ந்தும் புரிந்தும் கவனிக்கும் மருத்துவ நிபுணர்கள் கிடைக்க வேண்டும்.” என அவர் பதிவிட்டுள்ளார்.
🤲🏻🤲🏻🇦🇫🇦🇫 pic.twitter.com/rYtNtNaw14
மேலும் “ஆஃப்கான் சிறுமிகள் தங்கள் கல்வி உரிமையை மீண்டும் பெறுவதற்கும், நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க முடிவு எடுக்க வேண்டும் என மனமாற்றத்துடன் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து மக்களுக்கும் கல்வியை வழங்குவது சமூகப் பொறுப்பு மட்டுமல்ல, நமது மதத்திலும், மதிப்புகளிலும் ஆழமாக அடங்கிய ஒரு அறநிலையாகும்.” எனக் கூறியுள்ளார்.
ரஷீத் கானின் இந்த உருக்கமான அறிக்கையால் ஆஃப்கானிஸ்தான் பெண்களின் கல்வி உரிமை மீதான விவாதம் மேலும் தீவிரமாகியுள்ளது.