இந்தியா
குஸ்தி போட்டிக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு தெரியுமா ? 99 வயதிலும் அசத்தும் குஸ்தி தாத்தா..!!

குஸ்தி போட்டிக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு தெரியுமா ? 99 வயதிலும் அசத்தும் குஸ்தி தாத்தா..!!
குஸ்தி வீரர்
இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரிய விளையாட்டாக குஸ்தி விளையாட்டு இருந்த வந்ததற்கு பல சான்றுகள் இருக்கின்றது. மகாபாரதம் போன்ற இதிகாசத்திலும் கூட பழம்பெறும் குஸ்தி வீரர் என்றால் அது கிருஷ்ணன், அனுமன், பலராமர் மற்றும் பல பேர் உள்ளனர். இப்படிப்பட்ட பாரம்பரிய விளையாட்டானது, பாரம்பரிய நகரமான மதுரையில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நிலையில், தற்பொழுது அந்த கொடியை தாங்கி பிடிப்பதற்காக குஸ்தி பயில்வான் ஆன மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கே.டி.பழனி மட்டுமே மிஞ்சி இருக்கின்றார்.
99 வயதை நெருங்கும் இவர், ஒரு காலகட்டத்தில் மதுரையின் பல்வேறு பகுதிகளான கரிமேடு, ஆரப்பாளையம், சிம்மக்கல், வசந்த நகர் போன்ற பகுதிகளில் நடைபெற்ற குஸ்தி விளையாட்டில் சண்டையிட்டு வீரர்களை தோற்கடித்துள்ளார். அப்படி ஒரு போட்டி தான், கேரளாக்காரன் சண்டை என்கின்றார். அக்காலகட்டத்தில் நோட்டீஸ் வெளியிடப்படும். அந்த நோட்டீசில் ‘கேரளாக்காரன் ஒருத்தன் மதுரையில் யாராவது என்னிடம் சண்டையிட வாருங்கள்’ என்று சவால் விடுக்க, இவர் அந்த கேரளாக்காரனை தோற்கடித்து பரிசுகளை வென்றுள்ளார்.
இவர் சிறு வயதில் முதல் முதலாக பயில்வானான ஆச்சாரியார் என்ற வாத்தியாரிடம் குஸ்தியை கற்றுக் கொண்டுள்ளார். பிறகு குஸ்தியை தனது உயிராக நினைத்த இவர், வட இந்தியன் ஒருவன் மதுரைக்கு வந்திருந்த பொழுது, அவனைப் பார்த்துதான் முதன்முதலாக இவரும், நண்பர்களும் இணைந்து 1944 இல், 26 சென்ட் நிலப்பரப்பில் தென்னை மரங்கள் நிறைந்த பகுதியில் பொது நோக்கத்திற்காக புதுயுக வாலிப திரேக என்ற பயிற்சி மையம் ஆரம்பித்துள்ளார்கள்.
பிறகு இவரும் இவருடைய பயில்வான் நண்பர்களும் இணைந்து இந்த பயிற்சி மையத்தில், வீரர்களுக்கு வண்டல் மண், செம்மண், நல்லெண்ணெய், குங்குமம் ஆகியவற்றை கலந்து குஸ்தி மைதானம் ஒன்றை உருவாக்கி, அதில் குஸ்தி, சிலம்பு போன்ற பலவிதமான பயிற்சிகளை வீரர்களுக்கு அளித்து வந்துள்ளனர். இப்படி அக்காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குஸ்தி பயிற்சி மையம், தற்பொழுது ராணுவம் மற்றும் போலீஸ் பயிற்சிகளுக்கு, பயிற்சி அளிக்கப்படும் மையமாகவும், குஸ்தி மையமாகவும் இருந்து வருகின்றது.
அதாவது இப்பயிற்சி மையத்தில், இளைஞர்கள் அனைவருக்கும் சிலம்பு, வால் சண்டை, கராத்தே, இளவட்டக்கல் தூக்குதல், உடற்பயிற்சி, ராணுவ பயிற்சி போன்ற பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதினால், அதன் மூலமாக பல்வேறு இளைஞர்கள் ராணுவம், போலீஸ் மற்றும் கின்னஸ் சாதனைகளில், சாதனை புரிந்தவர்களாக இருக்கின்றார்கள்.
அதேபோல் குஸ்தி என்ற பாரம்பரிய விளையாட்டு இனிவரும் காலகட்டத்தில் அழிந்து விடக்கூடாது என்பதற்காக செல்லூர் பகுதியைச் சேர்ந்த குஸ்தி வீரர் ஒருவர் இப்பயிற்சி மையத்திற்கு வாரம் ஒருமுறை வந்து விருப்பப்படும் இளைஞர்களுக்கு குஸ்தி பயிற்சிகளை அளித்து வருகின்றார். வரும் காலங்களில் இந்த பாரம்பரியமான குஸ்தி விளையாட்டு அழிந்து விடக்கூடாது என்பது எங்கள் பயிற்சி மையத்தின் நோக்கம் என்றும் 99 வயதை நெருங்கும் என்னைப்போல் அனைவருமே நோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாக உள்ளது என்று, புன்னகையுடன் சொல்கின்றார் குஸ்தி பயில்வான் கே.டி.பழனி தாத்தா.