இந்தியா
கூடும் சட்டப்பேரவை.. நாளை துணை நிதி நிலை தாக்கல்

கூடும் சட்டப்பேரவை.. நாளை துணை நிதி நிலை தாக்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு அடுத்த இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றுக் கூட்டத்தொடர் நடைபெற்றது. தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்துடன் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற்ற கூட்டத்துடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் சட்டப் பேரவை விதிகளின்படி சட்டப்பேரவை கூட்டம் முடிவுற்ற தேதியிலிருந்து ஆறு மாதத்திற்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட வேண்டும். இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதி கூட்டத் தொடராக இரண்டு நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டம் நாளை (9-ம் தேதி) காலை 9:30 மணிக்கு கூடுகிறது.
கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பேராயர் எஸ்ரா சற்குணம், ரத்தன் டாடா, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் பேரவையில் கொண்டுவரப்படுகிறது.
தொடர்ந்து 2024-25 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான துணை நிதிநிலை அறிக்கையும் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அரசர் தனித் தீர்மானமாக மதுரை மாவட்டம், அரட்டாபட்டி கிராமத்தில் இந்துஸ்தான் செக் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம இடங்களை மேற்கொள்ளக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு இடையே தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பேரவையில் பல்வேறு விவாதங்களில் கலந்து கொள்ள உள்ளனர்.