இந்தியா
திருமா Vs ஆதவ் அர்ஜுனா; “இருவரில் ஒருவர் தான் விசிகவில் இருப்பார்கள்” – நடிகை கஸ்தூரி ஆருடம்

திருமா Vs ஆதவ் அர்ஜுனா; “இருவரில் ஒருவர் தான் விசிகவில் இருப்பார்கள்” – நடிகை கஸ்தூரி ஆருடம்
தவெக தலைவர் விஜய் பங்கேற்று வெளியிடப்பட்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும், தவெக தலைவர் விஜய்யும் பேசிய அரசியல் குறித்தான பேச்சுகள் தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரியிடம் இது தொடர்பாகவும், இருவரின் பேச்சு குறித்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறிய பதில் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
அது குறித்து பேசிய நடிகை கஸ்தூரி, “2026 தேர்தலில் கூட்டணி கணக்கை வைத்து திமுக வென்று விட வேண்டும் என்ற நினைப்பது மைனஸ் ஆகும் என விஜய் தெரிவித்து இருப்பது நடந்தால் அவர் வாயில் நான் சர்க்கரை போடுவேன். இதைப் பேசியதற்கு அவருக்கு ஆதரவு கொடுக்கலாமே.
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை. காரணம் அவர் இன்று திமுக கூட்டணி எம்பியாக இருக்கிறார். ரொம்ப நாளாக திமுகவுக்கு வாக்கப்பட்டு அங்கேயே விசிக இருக்கிறது. ஆனால் ஆதவ் அர்ஜுனா அல்லது திருமாவளவன் இருவரில் ஒருவர் விசிகவில் இருப்பார்கள். இருவரும் இனி ஒன்றாக இருக்கமாட்டார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் பற்றி சொல்கிறார் என்று நினைக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக பேசுவது புதிது ஒன்றுமில்லை. இன்று விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா; ஏற்கனவே சனாதனத்தை பற்றியும் ரஜினியை பற்றியும் இதுபோன்று பேசி உள்ளார்.
தேர்தல் களத்தில் விஜய் எடுக்கும் முயற்சி தற்போது ஜாக்பாட். தமிழ்நாட்டில் உதய சூரியனுக்கு எதிராக இரட்டை இலை மட்டுமே கடந்த 60 ஆண்டு காலமாக இருந்து வந்துள்ளது. திமுக விஜயை முன்னிறுத்தி அதிமுகவின் வீச்சையும், உண்மையான முகத்தையும் மறைக்கிறார்கள். இது ஒரு அரசியல் வியாபார தந்திரம்.
சேகர்பாபுவின் நல்ல புத்தகத்தில் கஸ்தூரி இல்லை. அவரைப் பற்றிய கேள்விக்கு பதில் சொல்வதைத் காட்டிலும் கடந்து போவது நல்லது. 2026 தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஓரணியில் சேர்ந்தால் மக்கள் விரும்பும் மாற்றம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.