இந்தியா
“ரூ. 2000 வீட்டை சுத்தம் செய்யக்கூட பயன்படாது.. இதுதான் திராவிட மாடல் அரசா?” – அன்புமணி ஆவேசம்

“ரூ. 2000 வீட்டை சுத்தம் செய்யக்கூட பயன்படாது.. இதுதான் திராவிட மாடல் அரசா?” – அன்புமணி ஆவேசம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்தன. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்தன. அதேபோல், மழை வெள்ளம் மற்றும் அணை நீர் திறப்பு உள்ளிட்டவற்றாலும் இந்த மாவட்டங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்தன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ. 2000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 2000 கோடி உடனடி நிவாரணமாக வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதேசமயம், மத்திய அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து ரூ. 994.80 கோடியை தமிழ்நாட்டு அரசிற்கு விடுவிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், கண்டகாடு கிராமத்தில் இன்று பாமக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவரும், பாமக தலைவருமான அன்புமணி பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நியூஸ் 18 தொலைக்காட்சி கடலூர் செய்தியாளர் பிரேம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் கலந்துரையாடல் நடத்தினார். அதில், அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது; “சாத்தனூர் அணையில் இரவோடு இரவாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு.
இதே அரசாங்கம், அதிமுக ஆட்சிக் காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டபோது மிகப்பெரிய விமர்சனத்தை செய்தது. அதை விட மோசமானதாக சாத்தனூர் அணையில் இருந்து இரவோடு இரவாக அறிவிப்பு இல்லாமல் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறால், பாதிப்புகள் ஏற்பட்ட உடனே 2000 ரூபாய் நிவாரணம் அறிவிக்கிறார்கள். 2000 ரூபாய் நிவாரணம் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தம் செய்யக்கூட பயன்படாது.
சென்னையில் வெள்ளம் வந்தால் மூன்றாவது மாடி ஆறாவது மாடியில் இருப்பவர்களுக்கும் 6000 ரூபாய் நிவாரணம் அறிவிக்கிறார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பொழுது 6000 ரூபாய் அறிவித்தார்கள். ஆனால் கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் வெறும் 2000 மட்டுமே அறிவிக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் அரசா?
முக்கியமான அணைகள் நீர் திறப்பு விஷயங்களில் அமைச்சர்கள் தலையீடு இருக்கக்கூடாது. அதிகாரிகளே முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய், பிறப்பால் முதலமைச்சர் ஆகிறார்கள் என்று பேசியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அன்புமணி, “மற்ற கட்சிகளைப் போன்று விளம்பர அரசியல் பாமக செய்யவில்லை. நாங்கள் களத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்கின்ற கட்சி. மற்ற கட்சிகளைப் போல் தொலைக்காட்சிகள் விளம்பரம் மற்றும் விவாதத்தில் ஈடுபடுபவர்கள் நாங்கள் இல்லை” என்று பதில் அளித்தார்.