விளையாட்டு
அடிலெய்டில் அதகளம்.. மீண்டும் செஞ்சுரி.. இந்தியாவை இம்சிக்கும் டிராவிஸ் ஹெட்!

அடிலெய்டில் அதகளம்.. மீண்டும் செஞ்சுரி.. இந்தியாவை இம்சிக்கும் டிராவிஸ் ஹெட்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்- கவாஸ்கர் தொடரின் 2 ஆவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், 86 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
கவாஜா 13 ரன்களிலும், லபுஷேன் 64 ரன்களிலும், ஸ்மித் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த மிட்செல் மார்ஷும் 9 ரன்களில் வெளியேறினார்.
எனினும் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய அவர் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்தை பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினார். முதல் அரைசதத்துக்கு 63 பந்துகளை எடுத்துக்கொண்ட ஹெட், அடுத்த அரைசதத்தை பூர்த்தி செய்ய, 48 பந்துகளே எடுத்துக்கொண்டார்.
சற்று முன்பு வரை ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 115 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் என்றால், டிராவிஸ் ஹெட் வேறு மோடுக்கு வந்துவிடுகிறார். இந்தியாவின் 50 ஓவர் உலகக்கோப்பை கனவையும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவையும் தகர்த்தது இதே டிராவிஸ் ஹெட் தான்.
2023ல் லண்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 163 ரன்கள் விளாசிய ஹெட், அதே ஆண்டில் அகமதாபாத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 110 கோடி இந்தியர்களின் கனவை தனது செஞ்சுரியால் நொறுக்கினார். இவரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவிடம் இருந்து கோப்பை நழுவியது. 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 137 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் 76 ரன்களும், சில நாட்கள் முன் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 89 ரன்களும் எடுத்த நிலையில், இன்றைய போட்டியில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் 3 அரைசதம், ஒரு சதம் எடுத்து தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக இம்சை அரசனாக விளங்கிவருகிறார்.
இதற்கிடையே, இன்றைய சதத்தை டிராவிஸ் ஹெட் தனது குழந்தைக்கு சமர்ப்பித்தார். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அந்தக் குழந்தையுடன் ஹெட்டின் மனைவி இன்று போட்டியைப் பார்க்க வந்திருந்தார். அப்போது சதம் விளாசிய அவர், குழந்தைக்கு அதை சமர்ப்பிப்பதாக பேட் மூலம் தெரிவித்தார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.