இந்தியா
கட்டப்பட்ட கை, கால்கள்… நிதி நிறுவன ஊழியருக்கு நடந்த கொடூரம்.. மூன்று நாட்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி!

கட்டப்பட்ட கை, கால்கள்… நிதி நிறுவன ஊழியருக்கு நடந்த கொடூரம்.. மூன்று நாட்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி!
திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற திண்டுக்கல் தாலுகா காவல் நிலை போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்யப்பட்டவர் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து முதல்கட்ட விசாரணையை தொடங்கினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும், தடயவியல் துறையினர் மூலமும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கொலை செய்ய பயன்படுத்திய பட்டாக்கத்தியை அங்கிருந்து கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பது அடையாளம் காணப்பட்டது. மேலும் 39 வயதான அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு வசதி கடன் பிரிவில் வேலை பார்த்து வந்த பாலமுருகன், மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென பாலமுருகன் காணவில்லை என்று, அவரது குடும்பத்தினர் சின்னாளபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் தோமையார்புரம் அருகே கை, கால் மற்றும் கண்கள் கட்டப்பட்டு, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குப்பைக் கிடங்கில் வீசப்பட்டு கிடந்த சடலத்தை மீட்டுள்ள போலீசார், அவருக்கு முன்பகை உள்ளதா? எதனால் கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில், குற்றவாளிகளை கைது செய்த பின்னரே, கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.