இந்தியா
சென்னையில் நடைபெற்ற தெலுங்கு நிகழ்ச்சி… கஸ்தூரிக்கு கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுப்பு

சென்னையில் நடைபெற்ற தெலுங்கு நிகழ்ச்சி… கஸ்தூரிக்கு கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுப்பு
நடிகை கஸ்தூரி
தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு பேசும் மக்களை நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டார்.பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ள நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் உள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னை அசோக் நகர் காசி டாக்கிஸ் திரையரங்கில் தமிழ்நாடு தெலுங்கு பீபுள் சொசைட்டி சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்னை வந்த நடிகை கஸ்தூரிக்கு கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.
இதனால் நடிகை கஸ்தூரி சென்னை வடபழனி காவல் நிலைய உதவி ஆணையரிடம் எதற்காக அனுமதி மறுக்கப்பட்டது என்பதை குறித்த விளக்கத்தை கேட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் என் மீது ஒரு வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இதுபோல நேர்மறையான நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற தடை ஏற்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது.
தெலுங்கு மக்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு நான் செல்ல வில்லை என்றால் ஏன் செல்ல வில்லை என்ற கேள்வி வரும். தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான தெலுங்கு பேசும் மக்களிடம் இருந்து என்னை அந்நியப்படுத்தப்பட்டுள்ளது போல எனக்கு தோன்றுகிறது இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவித்தார். இன்று என்னால் செல்ல முடியவில்லை ஆனால் ஒரு நாள் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் அன்றைக்கு என்னுடைய தெலுங்கு சொந்தங்களை நான் சந்திப்பேன் இவ்வாறு கூறினார்.