இந்தியா
துரைமுருகன் அருகில் இருக்கை… சட்டப்பேரவையில் உதயநிதிக்கு 3வது இடம்?

துரைமுருகன் அருகில் இருக்கை… சட்டப்பேரவையில் உதயநிதிக்கு 3வது இடம்?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் இறுதி கூட்டத் தொடர் 2 நாட்கள் நடைபெறும் என கடந்த வாரம் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அண்மையில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள், ஆளுமைகளுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சி.பி.எம். முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ரத்தன் டாடா, எஸ்ரா சற்குணம், முரசொலி செல்வம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் கேள்வி நேரம் தொடங்கப்பட்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான துணை நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் 3ஆவது இருக்கை வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்ததாக உதயநிதிக்கு இருக்கை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்தபோது முதல் வரிசையில் 13ஆவது இருக்கை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது துணை முதலமைச்சராக சட்டப்பேரவையில் பங்கேற்றிருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.