Connect with us

இந்தியா

“நான் முதலமைச்சராக இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்” – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

Published

on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Loading

“நான் முதலமைச்சராக இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்” – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Advertisement

மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர் தீர்மானம் கடும் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என பேசினார். 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு பல்லுயிர் தளமாக அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய நிலையிலும், சுரங்க அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார். எனவே சுரங்க அனுமதியை திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் மாநில அரசின் அனுமதியின்றி திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கக் கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் துரைமுருகன் பேசினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், மதிமுக, விசிக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசினர் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தெரிவித்தனர்.  தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், சுரங்கம் ஏலம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசிடம் விளக்கம் கேட்கும்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இந்த திட்டம் வந்திருக்காது என பேசினார். மேலும் இந்த சுரங்க ஏலம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் தமிழக பாஜக பேசியிருப்பதாகவும், மக்களின் விருப்பப்படி நல்ல முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.… pic.twitter.com/V1riWfa03l

இதையடுத்து, பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2023 ஆம் ஆண்டே சுரங்க ஏலம் தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு போதிய எதிர்ப்பை மாநில அரசு தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் வரும்போதே திமுக எம்.பி.க்கள் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை எனக்கூறிய எடப்பாடி பழனிசாமி, 2023 ஆம் ஆண்டு துரைமுருகன் எழுதிய கடிதத்தின் விவரங்களையும் வெளியிடவில்லை எனவும் பேசினார்.

Advertisement

அதற்கு பதிலளித்து பேசிய துரைமுருகன், ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே இருக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திருத்தம் சுய மரியாதைக்கு சவால் விடுக்கும் செயல் எனவும், நில உரிமைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தம் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக கடிதம் எழுதியதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் அமைச்சர்கள் சந்தித்து பேசியதாகவும், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, சுரங்க ஏல அனுமதிக்கு மாநில அரசு எந்தவிதமான எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என மத்திய அரசு கூறியிருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர், பத்து மாத காலங்களாக திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பின்னர் பேசிய முதல்வர், இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மத்திய அரசு ஏலமே விட்டிருந்தாலும் இந்த திட்டத்தம் நான் முதலமைச்சராக இருக்கும் வரை செயல்படுத்த விட மாட்டேன் எனவும், அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் எனவும் சூளுரைத்தார். கடும் விவாதத்திற்கு பிறகு அரசினர் தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பிறகு ஒருமனதாக தீர்மானம் நிறைவேறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன